அரவக்குறிச்சி, நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் திடீர் மழை
அரவக்குறிச்சி, நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் திடீர் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அரவக்குறிச்சி, நொய்யல்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி மற்றும் சுற்று வட்டாரத்தில் நேற்று காலை முதலே வெயில் வாட்டி வதைத்தது. மாலை 3 மணியளவில் திடீரென்று வெயில் மறைந்து கரு மேகங்கள் சூழ ஆரம்பித்தது. பின்னர் 3.30 மணிக்கு திடீரென பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. தொடர்ந்து 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. பின்பு இரவு சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
இதேபோல் நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அத்திப்பாளையம், குப்பம், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், புங்கோடை, நடையனூர், பேச்சிப்பாறை, தவிட்டுப்பாளையம், பாலத்துறை, வேட்டமங்கலம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், குந்தாணிபாளையம், நஞ்சை புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு 7 மணியளவில் திடீரென சாரல் மழை பெய்தது. அதை தொடர்ந்து மழை வேகமாக பெய்தது. இதன் காரணமாக சாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் நனைந்து கொண்டு சென்றனர்.
விவசாயிகள் மகிழ்ச்சி
வேலாயுதம்பாளையம், கூலக்கவுடனூர், கந்தம்பாளையம், மூலிமங்கலம், காகிதபுரம், புதுகுறுக்கு பாளையம், செக்குமேடு, மூர்த்திபாளையம், நாணப்பரப்பு, செம்பாடம்பாளையம், தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், தளவாப்பாளையம், கடம்பங்குறிச்சி, மண்மங்கலம் ஆகிய பகுதிகளில் மாலை 6 மணியளவில் மழை பெய்தது. இந்த மழை இடை விடாமல் 1 மணி நேரம் பெய்தது. இதனால் சாலைகளிலும், பள்ளமான பகுதிகளிலும், மழைநீர் தேங்கி நின்றது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அரவக்குறிச்சி மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. குறிப்பாக ஆடு மாடுகளுக்கு தீவனமாக புற்கள் வளர இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.