மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கன மழை: அணைகளில் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கன மழை:  அணைகளில் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு
x

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது

திருநெல்வேலி

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

பாபநாசம்-சேர்வலாறு

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கனமழை பெய்வதால் அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

மாவட்டத்தின் பிரதான அணைகளில் ஒன்றான 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணையில் நீர்மட்டம் நேற்று முன்தினம் 84 அடியாக இருந்தது. இந்த அணையில் நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடிக்கும் மேலாக உயர்ந்து நேற்று 91.60 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,922 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் வினாடிக்கு 1,005 கன அடியாகவும் உள்ளது.

இதேபோன்று நேற்று முன்தினம் 117.78 அடியாக இருந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 11 அடிக்கும் அதிகமாக உயர்ந்து நேற்று 128.84 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 73.90 அடியாக உள்ளது.

ராமநதி-கடனாநதி

84 அடி உயரம் கொண்ட ராமநதி அணையில் 82 அடி நீர்மட்டம் உள்ளதால், மறுகால் வழியாக தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 306 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் வினாடிக்கு 60 கன அடியாகவும் உள்ளது.

இதேபோன்று 85 அடி உயரம் கொண்ட கடனாநதி அணையின் நீர்மட்டம் 82 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,073 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் வினாடிக்கு 60 கன அடியாகவும் உள்ளது. அணை முழு கொள்ளளவை நெருங்குவதால் ஒரு மதகின் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதையொட்டி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல நேற்று முன்தினம் 103 அடியாக இருந்த அடவிநயினார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடிக்கும் அதிகமாக உயர்ந்து நேற்று 112.75 அடியாக இருந்தது. கருப்பாநதி அணை நீர்மட்டமும் ஒரே நாளில் 8 அடிக்கும் மேல் உயர்ந்து நேற்று 56.11 அடியாக இருந்தது.

மழை விவரம்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

நாங்குநேரி-11, பாபநாசம்-8, மணிமுத்தாறு-3, சேர்வலாறு-3, கொடுமுடியாறு-6, கடனாநதி-50, ராமநதி-20, கருப்பாநதி-13, குண்டாறு-41, அடவிநயினார்-33.


Next Story