கிராம மக்கள் திடீர் சாலை மறியல்
மூங்கில்துறைப்பட்டு அருகே கிராம மக்கள் திடீர் சாலைமறியல் சந்தேகத்துக்குரிய இடத்தை அதிகாரிகள் தோண்டாததால் ஆத்திரம்
மூங்கில்துறைப்பட்டு
மூங்கில்துறைப்பட்டு அருகே புதூர் ஏரியில் உள்ள சுடுகாட்டில் யாரோ மர்மநபரை கொன்று புதைத்து இருப்பதற்கான அடையாளம் உள்ளது. இது பற்றிய தகவல் அறிந்து வந்த மூங்கில்துறைப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் வடபொன்பரப்பி வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது சம்பவ இடத்தை தாசில்தார் நேரில் வந்து ஆய்வுசெய்த பின்னரே குறிப்பிட்ட இடத்தை தோண்டிப்பார்க்க முடியும் என போலீசார் தெரிவித்தனர். இதனால் தாசில்தார் வருகையை அந்த பகுதி மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஆனால் நேற்று 4 ஆட்கள் ஆகியும் சம்பவ இடத்துக்கு தாசில்தார் வராததால் ஆத்திரம் அடைந்து பாக்கம், புதூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் 600-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையில் புதூர் பஸ் நிறுத்தம் மற்றும் சுடுகாட்டின் அருகில் தனித்தனியாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவலறிந்து வந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி மற்றும் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் சிலர் போலீசாரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். பின்னர் இது குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் பேசி உடனடி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.