குமரி மாவட்டத்தில் திடீர் கடல் சீற்றம்


குமரி மாவட்டத்தில் திடீர் கடல் சீற்றம்
x
தினத்தந்தி 7 Aug 2023 12:15 AM IST (Updated: 7 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராஜாக்கமங்கலம் அருகே உள்ள லெமூரில் நேற்று கடல் சீற்றம் ஏற்பட்டு ராட்சத அலைகள் கடற்கரையில் இருந்த கடைகளில் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

ராஜாக்கமங்கலம்:

ராஜாக்கமங்கலம் அருகே உள்ள லெமூரில் நேற்று கடல் சீற்றம் ஏற்பட்டு ராட்சத அலைகள் கடற்கரையில் இருந்த கடைகளில் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

லெமூர் கடற்கரை

குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள கணபதிபுரம் பேரூராட்சியில் ஆயிரம்கால் பொழிமுகம் என்ற லெமூர் கடற்கரை உள்ளது. இதனை குமரியின் குட்டி கோவளம் என்று கூறுவார்கள். இங்கு தினமும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை, விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். இவர்கள் கடல் அலையில் கால்களை நனைத்தும், குளித்தும், கடற்கரையில் அமர்ந்து கடல் அழகை ரசித்தும் செல்கின்றனர்.

கடல் சீற்றம்

இந்தநிலையில் லெமூர் கடலில் நேற்று காலை முதல் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. ராட்சத அலைகள் எழுந்து ஆக்ரோஷமாக கரையை நோக்கி சீறி வந்த வண்ணம் இருந்தது. அவ்வாறு வந்த அலைகள் கடற்கரை மணற்பரப்பை கடந்து கரையோரம் அமைக்கப்பட்டுள்ள கடைகளுக்குள் புகுந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர்.

இதற்கிடையே சில சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் கடற்கரையில் சுற்றி வந்தனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அப்புறப்படுத்தினர். மேலும் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கடல் அலையில் விளையாடலாம் என்று எண்ணி வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதுபோல் குளச்சல், கோடிமுனை, குறும்பனை, கொட்டில்பாடு போன்ற பகுதிகளிலும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கன்னியாகுமரியில் கடலில் பயங்கர காற்று வீசியதால் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.


Next Story