குளச்சலில் திடீர் கடல் சீற்றம் கடற்கரையில் மணல் குவிந்தது


குளச்சலில் திடீர் கடல் சீற்றம் கடற்கரையில் மணல் குவிந்தது
x

குளச்சலில் திடீர் கடல் சீற்றம் ஏற்பட்டதால் கடற்கரையில் மணல் குவிந்தது

கன்னியாகுமரி

குளச்சல்:

குளச்சலில் திடீர் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால், பழைய பாலம் பகுதியில் மணற்திட்டு உருவானது.

குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் மேற்கு கடல் சீற்றமாக காணப்படுவது வழக்கம். இதனால், ராட்சத அலைகள் எழுந்து மணற்பரப்பு வரை ஆக்ரோஷத்துடன் வரும். அதனால் பாதுகாப்பு கருதி விசைப்படகுகள், வள்ளங்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியதால் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பின. இதனால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டது. மேலும், கடந்த 1-ந் தேதி முதல் மேற்கு கடல் பகுதியில் விசைப்படகுகளுக்கு 61 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. ஆனால், வள்ளங்கள், கட்டுமரங்கள் வழக்கம்போல் மீன் பிடித்து விட்டு வருகின்றன.

இந்தநிலையில் நேற்று காலையில் குளச்சல் கடல் பகுதியில் கடல் திடீர் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால், ராட்சத அலைகள் எழுந்து மணற்பரப்பு வரை ஆக்ரோஷத்துடன் வந்து செல்கிறது. இந்த அலை வெள்ளத்தால் துறைமுக பழைய பாலத்தின் தூண் அருகில் கடலரிப்பு ஏற்பட்ட பகுதியில் மணற்குவியல் உருவாகி உள்ளது.

இதேபோல் குளச்சல், கொட்டில்பாடு சுற்றுவட்டார பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் கரையோரத்தில் நிறுத்தப்பட்ட வள்ளங்களை மீனவர்கள் பாதுகாப்பு கருதி மேடான பகுதிகளுக்கு கொண்டு சென்று நிறுத்தி வைத்தனர். வள்ளங்கள் வழக்கம்போல் மீன்பிடிக்க சென்றன. அவற்றில் குறைவான அளவிலான மீன்களே கிடைத்தன.


Next Story