விவசாயி வீட்டின் முன்பு திடீர் பள்ளம்
ஒட்டன்சத்திரத்தில் விவசாயி வீட்டின் முன்பு திடீர் பள்ளம் உருவானதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஒட்டன்சத்திரம் திருவள்ளுவர் சாலையை சேர்ந்தவர் சிவக்குமார். விவசாயி. இவரது வீட்டின் முன்பு உள்ள தெருவில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தநிலையில் நேற்று அப்பகுதியில் பயங்கர சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிவக்குமார் குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்து பார்த்தனர்.
அப்போது சிவக்குமார் வீட்டின் முன்பு ராட்சத பள்ளம் உருவாகி இருந்தது. சுமார் 4 அடி ஆழமும், 5 அகலமும் கொண்டதாக அந்த பள்ளம் இருந்தது. இதுபற்றிய தகவல் அப்பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தனர். இதேபோல் ஒட்டன்சத்திரம் நகராட்சி நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நகராட்சி ஊழியர்கள் அங்கு விரைந்தனர். பின்னர் மண்ணால் அந்த பள்ளத்தை மூடினர். பள்ளம் உருவான இடத்தில் ஏற்கனவே செப்டிக் டேங்க் இருந்ததாகவும், அதனை சரிவர மூடாமல் சமீபத்தில் பேவர் பிளாக் கற்களை பதித்து சாலை அமைத்ததாகவும் கூறப்படுகிறது. பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, நகராட்சி நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.