தொழிலாளி சாவில் திடீர் திருப்பம்; லாரி டிரைவர் கைது
குளச்சல் அருகே வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட தொழிலாளி சாவில் திடீர் திருப்பமாக லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். தொழிலாளியை அவர் கத்தியால் குத்தியதில் இறந்தது அம்பலமானது.
குளச்சல்:
குளச்சல் அருகே வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட தொழிலாளி சாவில் திடீர் திருப்பமாக லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். தொழிலாளியை அவர் கத்தியால் குத்தியதில் இறந்தது அம்பலமானது.
தொழிலாளி
குளச்சல் அருகே செம்பொன்விளையை சேர்ந்தவர் அருள்பாபி (வயது 46), தொழிலாளி. திருமணமாகாத இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அருள்பாபி குளச்சல் சாஸ்தான்கரை பகுதியில் சொந்தமாக வீடு கட்டி தனியாக வசித்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த 8-ந் தேதிக்கு பிறகு அருள்பாபி வீடு உள்பக்கமாக பூட்டி கிடந்தது. மேலும் அருள்பாபியையும் காணவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது நண்பர்கள் நேற்றுமுன்தினம் குளச்சல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அழுகிய நிலையில் உடல் மீட்பு
உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு கட்டிலில் இருந்து தவறி விழுந்த நிலையில் ரத்தக்காயத்துடன் அழுகிய நிலையில் அருள்பாபி பிணமாக கிடந்தார்.
பின்னர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மதுபோதையில் கீழே விழுந்து அவர் இறந்திருக்கலாம் என போலீசார் நினைத்தனர்.
லாரி டிரைவர் கைது
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் பிரேத பரிசோதனையில் கத்தியால் குத்தியது போன்ற காயம் இருந்ததை டாக்டர்கள் உறுதி செய்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அதாவது அவரை கத்தியால் குத்தியதாக நெய்யூர் புதுக்குளத்தங்கரையை சேர்ந்த லாரி டிரைவர் ராஜன் (55) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
பரபரப்பு தகவல்
அதாவது மது அருந்தும் பழக்கம் உள்ள அருள்பாபி கடந்த 3-ந் தேதி பயணியர் விடுதி சந்திப்பில் உள்ள டாஸ்மாக் கடை அருகே வந்தார். லாரி டிரைவர் ராஜனுடன் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த ராஜன் கத்தியால் அருள்பாபியை குத்தி விட்டு தப்பி சென்று விட்டார். பின்னர் படுகாயமடைந்த அருள்பாபி குளச்சல் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார். மேல்சிகிச்சைக்கு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும்படி கூறியுள்ளனர். ஆனால் அவர் அங்கு செல்லாமல் வீட்டுக்கு வந்து விட்டார்.
அந்த காயத்துடனேயே சுற்றி திரிந்துள்ளார். இந்த அலட்சியத்தால் அவர் சில நாட்கள் கழித்து உயிரிழந்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் இந்த வழக்கை 304 (2) பிரிவாக மாற்றி வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கைதான ராஜனை இரணியல் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.