திடீரென வால்வு திறந்து 20 அடி உயரத்திற்கு பீறிட்டு எழுந்த தண்ணீர்


திடீரென வால்வு திறந்து 20 அடி உயரத்திற்கு பீறிட்டு எழுந்த தண்ணீர்
x

திடீரென வால்வு திறந்து 20 அடி உயரத்திற்கு பீறிட்டு எழுந்த தண்ணீரால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர்

கரூர் மாவட்டம், மாயனூர் பகுதியில் காவிரி ஆற்றில் கிணறு அமைக்கப்பட்டு மின்மோட்டார் பொருத்தி குழாய் மூலம் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதிக்கு கூட்டு குடிநீர் திட்டத்திற்காக காவிரி நீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த குடிநீர் திட்ட குழாயில் கடந்த மாதம் பராமரிப்பு பணியில் மேற்கொண்டபோது உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணானது. இதனை அடுத்து குழாய் உடைப்பை சரி செய்து பராமரிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு தற்போது தடையின்றி காவிரி நீர் நத்தம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது.

இந்தநிலையில் நேற்று மாயனூரில் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மேல் சென்ற இந்த குடிநீர் திட்ட குழாயின் வால்வு திடீரென திறந்து சுமார் 20 அடி உயரத்திற்கு தண்ணீர் பீறிட்டு அடித்தது. இப்படி சுமார் 1½ மணி நேரத்திற்கு மேலாக பீறிட்டு அடித்த காவிரி நீரால் நத்தம் பகுதிக்கு செல்லும் நீர் தடைபட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகளும், ஊழியர்களும் மின் மோட்டாரை நிறுத்தி வால்வை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.


Next Story