அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கலெக்டர் ஆய்வு
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அரவைப் பருவம்
மடத்துக்குளத்தையடுத்த கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையான இது ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களை அரவைப் பருவமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த ஆலைக்கு உடுமலை, மடத்துக்குளம் வட்டார விவசாயிகள் மட்டுமல்லாமல் தாராபுரம், பல்லடம், நெய்க்காரப்பட்டி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதி விவசாயிகளும் கரும்பு வழங்கி வருகிறார்கள். ஒப்பந்த அடிப்படையில் ஆலைக்கு கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள ஆதார விலையான டன் ரூ.2823.25 மற்றும் மாநில அரசின் ஊக்கத்தொகை ரூ.195 சேர்த்து டன்னுக்கு ரூ.3018.25 வழங்கப்படவுள்ளது.நடப்பு ஆண்டில் கடந்த 3-ந் தேதி அரவை தொடங்கி நடைபெற்று வருகிறது.
திடீர் ஆய்வு
ஆலையில் பராமரிப்புப் பணிகளுக்காக ரூ.30 கோடிக்கு மேல் தேவைப்பட்ட நிலையில் ரூ.10 கோடி மதிப்பில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே கடந்த ஆண்டைப் போல எந்திரங்கள் பழுதால் பாதிப்பு ஏற்படாமல் முழுமையாக இயங்குமா என்ற அச்ச உணர்வு விவசாயிகளிடம் உள்ளது. அதேநேரத்தில் முக்கியமான பணிகள் அனைத்தும் நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளதால் ஆலை இயக்கத்தில் தடை ஏற்படாது என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் வடிப்பாலையில் மாவட்ட கலெக்டர் வினீத் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் ஆலையில் உற்பத்தித்திறன், எந்திரங்களின் தற்போதைய நிலை, தினசரி அரவை, கரும்பு சாகுபடி உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது ஆலையின் மேலாண்மை இயக்குனர் சண்முகநாதன், உடுமலை ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன், மடத்துக்குளம் தாசில்தார் செல்வி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.