மாமனார், மாமியார் மீது தாக்குதல்: தட்டிக்கேட்ட சர்க்கரை ஆலை ஊழியர் வெட்டிக் கொலை ரிஷிவந்தியம் அருகே பரபரப்பு
ரிஷிவந்தியம் அருகே மாமனார், மாமியார் மீது தாக்கியவரிடம் தட்டிக்கேட்ட சர்க்கரை ஆலை ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
ரிஷிவந்தியம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த நூரோலை காட்டுக் கொட்டகையை சேர்ந்தவர் ஜோசப் மகன் கிரகோரி (வயது 58). இவரது மனைவி புளோரா (50). இவர்கள் நேற்று முன்தினம் மதியம் அவிரியூர் சாலையில் ஆடு மேய்த்து கொண்டிருந்தனர்.
அப்போது, நூரோலை காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் விவேகானந்தன் என்பவர், ஏன் இங்கு ஆடு மேய்க்கிறீர்கள்? என்று கேட்டு தகராறு செய்துள்ளார். மேலும் கிரகோரி, புளோரா ஆகியோரை தாக்கினார்.
இதுபற்றி அறிந்த கிரகோரியின் மூத்த மருமகனான கச்சிராயப்பாளையம் சர்க்கரை ஆலையில் பிட்டராக வேலை செய்து வரும், அக்கராயப்பாளையத்தை சேர்ந்த பிச்சை மகன் ஆல்பர்ட் (38) என்பவர், விவேகானந்தனிடம் சென்று நியாயம் கேட்டார்.
கொடுவாளால் வெட்டினார்
அப்போது விவேகானந்தன் தான் வைத்திருந்த கொடுவாளால் ஆல்பர்ட்டின் தலையில் வெட்டினார். இதில் ஆல்பர்ட் படுகாயமடைந்தார். உடனே அவரது குடும்பத்தினர் ஆல்பர்ட்டை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் விவேகானந்தன் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.