பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள எறையூர் சர்க்கரை ஆலை முன்பு அனைத்து விவசாயிகள் சங்கம் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் குறித்து விவசாயிகள் கூறியதாவது:- பெரம்பலூர் சர்க்கரை ஆலை கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை விவசாயிகளிடம் டன் ஒன்றுக்கு ரூ.500 வீதம் இணை மின் திட்டத்திற்காக மொத்தம் ரூ.7 கோடியே 95 லட்சத்தை பிடித்தம் செய்தது. இதற்கு 3 ஆண்டுகளில் பத்திரம் வழங்க வேண்டும். ஆனால் 16 ஆண்டுகளாக பத்திரம் வழங்கவில்லை. எனவே கரும்பு விவசாயிகளுக்கும் 13 சதவீத வட்டியுடன் அந்த தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும்.

தமிழக அரசு தேர்தல் வாக்குறுதி அளித்தவாறு கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரமும், நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,500-ம் வழங்க வேண்டும். கரும்பு வெட்ட கூலி அதிகமாவதால் வெட்டுக் கூலியை மாநில அரசும், ஆலை நிர்வாகமும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.


Next Story