அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை திறக்கக்கோரி கரும்பு விவசாயிகள் நடைபயணம்-போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை திறக்கக்கோரி கரும்பு விவசாயிகள் நடைபயணம் சென்றனர். ஆனால் நடைபயணத்திற்கு அனுமதி மறுத்து போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அலங்காநல்லூர்,
அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை திறக்கக்கோரி கரும்பு விவசாயிகள் நடைபயணம் சென்றனர். ஆனால் நடைபயணத்திற்கு அனுமதி மறுத்து போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நடைபயணம்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை தொடங்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் ஏற்கனவே நடத்தினர். இந்நிலையில் நேற்று காலை அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை முன்பு இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நடைபயணம் சென்று மனு கொடுக்க கரும்பு விவசாயிகள் முடிவு செய்து புறப்பட்டனர்.
இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் விவசாயிகள் ஆலை முன்பு, மாநில சங்க தலைவர் வக்கீல் பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தடுத்து நிறுத்தம்
அதன் பின்னர் நடைபயணம் செல்ல விவசாயிகள் முயன்றனர். மறுபடியும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாரின் எதிர்ப்பையும் மீறி கரும்பு விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி நடைபயணம் சென்றனர்.
போலீசார் அச்சம்பட்டி சாலையின் அருகில் தடுத்து நிறுத்தியதால் கரும்பு விவசாயிகள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மனு அளித்தனர்
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் அவர்கள் வேனில் ஏறிச் சென்று மதுரை கலெக்டர் அலுவலகம் சென்று மனு கொடுத்தனர்.
இதில் மாநில விவசாயிகள் சங்க செயலாளர் கதிரேசன், பொது செயலாளர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன், உமா மகேஸ்வரன், துணைச் செயலாளர் ஸ்டாலின் குமார், துணைத் தலைவர் ராமராஜ், கிளை தலைவர் காஞ்சரம் பேட்டை போஸ், முருகன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.