கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்


கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
x

திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

கபிஸ்தலம்;

திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டம்

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள திருமண்டங்குடியில் தனியார் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் நாக.முருகேசன் தலைமையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சர்க்கரை ஆலை தனக்காக முறைகேடாக விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் முழுவதையும் தீர்த்து விவசாயிகளை பிரச்சினையிலிருந்து விடுவிக்க வேண்டும். திருஆரூரான் சர்க்கரை ஆலையால் விவசாயிகளின் கரும்பு கிரயத்தில் பிடித்தம் செய்யப்பட்டு வங்கிகளுக்கு அனுப்பப்படாமல் உள்ள பயிர்க்கடன் தொகையை முழுவதையும் வங்கியில் செலுத்த வேண்டும்.

கோஷம் எழுப்பினர்

மத்திய- மாநில அரசுகள் அறிவித்த கரும்புக்கான முழு தொகை மற்றும் அனைத்தையும் வட்டியோடு ஒரே தவணையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். வெட்டுக்கூலி, வாகன வாடகை, முழுவதையும் வட்டியுடன் ஒரே தவணையில் வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் திருமண்டங்குடி சர்க்கரை ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இரவு வரை

காத்திருப்பு போராட்டத்த்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் தங்க. காசிநாதன், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாசன சங்க செயலாளர் சுந்தர. விமலநாதன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார், தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு, காவிரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் முருகன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.நேற்று காலை தொடங்கிய காத்திருப்பு போராட்டம் இரவு வரை நீடித்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மதியம் சர்க்கரை ஆலை வளாகத்திலேயே உணவு தயாரித்து விவசாயிகள் சாப்பிட்டு மீண்டும் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். சம்பவ இடத்தில் பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story