பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறுவடைக்கு தயாரான கரும்புகள்


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறுவடைக்கு தயாரான கரும்புகள்
x

விக்கிரமசிங்கபுரம் அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்புகள் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளன.

திருநெல்வேலி

விக்கிரசிங்கபுரம்:

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையன்று அனைவரும் அதிகாலையில் குளித்து புத்தாடை அணிந்து புதுப்பானையில் பொங்கலிட்டு இறைவனுக்கு படைத்து கரும்பை சுவைத்து மகிழ்வார்கள்.

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே அனவன்குடியிருப்பு உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் சுமார் 200 ஏக்கரில் விவசாயிகள் கரும்பு பயிரிட்டு உள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில் தற்போது கரும்புகள் நன்கு வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாராக உள்ளன. இதையடுத்து நன்கு வளர்ந்த கரும்புகளின் முதிர்ந்த தோகைகளை அகற்றும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் கரும்புகளை எளிதில் அறுவடை செய்யும் வகையில், 8 முதல் 10 கரும்புகளாக குறிப்பிட்ட இடைவெளியில் ஒன்றாக சேர்த்து தோகையால் கட்டுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:- ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரையிலும் செலவு செய்து கரும்பு பயிரிட்டுள்ளோம். பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் கரும்புகளை அரசே கொள்முதல் செய்வதாக அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும் இதுவரையிலும் கரும்புகளை கொள்முதல் செய்வதற்காக எங்களிடம் அதிகாரிகள் தொடர்பு கொள்ளவில்லை. இடைத்தரகர்களிடம் கொள்முதல் செய்யாமல் நேரடியாக விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்வதை அரசு உறுதி செய்ய வேண்டும். நெல் கொள்முதல் செய்வது போன்று வட்டார அளவில் கொள்முதல் நிலையங்கள் அமைத்தும் கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story