காதலன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்ததால் விரக்தி:கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
காரிமங்கலம்:
காரிமங்கலம் அருகே காதலன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்ததால் விரக்தி அடைந்த கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காதல்
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள ராமியம்பட்டியை சேர்ந்த சீனிவாசன். இவரது மகள் நிவேதா (வயது 18). இவர் தர்மபுரி அரசு கல்லூரியில் பி.ஏ.தமிழ் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் மாணவி திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் காரிமங்கலம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவியும், அதே பகுதியை சேர்ந்த பூக்கடை ஊழியர் சக்திவேல் (22) என்பவரும், காதலித்து வந்ததும், அவர் மாணவியை கடத்தி சென்றதும் தெரியவந்தது. அவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இதனிடையே சக்திவேலை போலீசார் கைது செய்தனர். மேலும் மாணவியை மீட்டு பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். காதலன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்ததால் மாணவி மனமுடைந்து காணப்பட்டார்.
மாணவி தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நிவேதா புதிய செல்போன் ஒன்று வைத்து இருந்துள்ளார். இதை கண்டு அவரது பெற்றோர் மகளை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி வீட்டு அருகில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று நிவேதாவின் உடலை கைப்பற்றி மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்ததால் விரக்தி அடைந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.