கோபி அருகே வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்த வியாபாரி உடல் மீட்பு- மகனின் உடலை தேடும் பணி தீவிரம்
கோபி அருகே வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்த வியாபாரி உடல் மீட்கப்பட்டது. தொடர்ந்து மகனின் உடலை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கடத்தூர்
கோபி அருகே வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்த வியாபாரி உடல் மீட்கப்பட்டது. தொடர்ந்து மகனின் உடலை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
வாய்க்காலில் குதித்தனர்
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நல்லூரை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 45). மளிகை கடை வியாபாரி. இவருடைய மனைவி பழனியம்மாள். இவர்களுடைய மகன்கள் சிரஞ்சீவி (6), விக்னேஷ் (3) ஆவர். விஜயகுமாருக்கும், பழனியம்மாளுக்கும் குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த விஜயகுமார் கடந்்த 19-ந் தேதி தனது 2 மகன்களுடன் கோபியை அடுத்த காளிகுளம் அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு சென்றுள்ளார். பின்னர் தனது 2 மகன்களுடன் வாய்க்காலில் குதித்து உள்ளார்.
ஒருவர் உடல் மீட்பு
இதற்கிடையே கோபி அருகே உள்ள உக்கரம் குப்பன் துறை பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் தண்ணீரில் சிறுவன் பிணமாக மிதப்பதாக கடத்தூர் போலீசாருக்கும், சத்தியமங்கலம் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கும் தகவல் கிடைத்தது.
தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டனர். மேலும் சிறுவனின் உடலை கடத்தூர் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
வியாபாரியின் பிணம்
இதைத்தொடர்ந்து விஜயகுமாரையும், விக்னேசையும் உறவினர்கள் தேடி வந்தனர். அவரது உடல் நேற்று வண்டிபாலம் என்ற இடத்தில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் அழுகிய நிலையில் கரையோரம் கிடப்பதை பொதுமக்கள் பார்த்தனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கடத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விஜயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விக்னேசை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.