8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
தர்மபுரியில் 8-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
தர்மபுரி பிடமனேரி நெல்லி நகரை சேர்ந்தவர் சங்கர சுப்பிரமணியன். கார் டிரைவர். இவரது மனைவி வாணிகணபதி. இவர் தனியார் கார்மென்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் தர்ஷன் (வயது 12). இவன் தர்மபுரியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் சம்பவத்தன்று தர்ஷன் தனது தம்பி முத்தரசனுடன் அருகில் உள்ள தாத்தா வீட்டிற்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினார். பின்னர் வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்று மாணவன் பூட்டி கொண்டான். நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் இது குறித்து தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவன் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.