மாமனார் இறுதி சடங்குக்கு செல்ல அனுமதி மறுப்பு: தனியார் ஆஸ்பத்திரி நர்சு தூக்குப்போட்டு தற்கொலை-உதவி கலெக்டர் விசாரணை


மாமனார் இறுதி சடங்குக்கு செல்ல அனுமதி மறுப்பு: தனியார் ஆஸ்பத்திரி நர்சு தூக்குப்போட்டு தற்கொலை-உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 14 Dec 2022 12:15 AM IST (Updated: 14 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பென்னாகரம்:

மாமனார் இறுதி சடங்குக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், தனியார் ஆஸ்பத்திரி நர்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

இளம்பெண்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் போடூர் காட்டுகொல்லை பகுதியை சேர்ந்தவர் மாதையன். இவருடைய மகள் ஜோதி (வயது 25). தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், தேங்காய்மரத்துப்பட்டியை சேர்ந்த தாய்மாமனான அன்பு என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தநிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக திருமணமான 1½ ஆண்டில் ஜோதி, தனது கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

பின்னர் கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிக்கும், ஒகேனக்கல்லை சேர்ந்த சாமிநாதனுக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு அமிழ்தரசன் என்ற 9 மாத மகன் உள்ளான்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்தநிலையில் ஜோதியின் முதல் கணவரான அன்புவின் தந்தை மாணிக்கம் கடந்த 11-ந் தேதி இறந்தார். இதனால் மாமனாரில் இறுதி சடங்குக்கு அழைத்து செல்லுமாறு ஜோதி, தனது 2-வது கணவர் சாமிநாதனிடம் கூறினார். அப்போது அவர், இறுதி சடங்குக்கு சென்றால் ஏதாவது பிரச்சினை ஏற்படும். எனவே அங்கு செல்லக்கூடாது என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஜோதி மனமுடைந்து காணப்பட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது, ஜோதி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

உதவி கலெக்டர் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த ஒகேனக்கல் போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். பின்னர் ஜோதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணமாகி 2½ ஆண்டுகளே ஆவதால் இந்த தற்கொலை குறித்து தர்மபுரி உதவி கலெக்டர் ஜெயக்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

மாமனார் இறுதி சடங்குக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் தனியார் ஆஸ்பத்திரி நர்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story