கடத்தூரில் கடன் தொல்லையால் தொண்டு நிறுவன நிர்வாகி தற்கொலை
மொரப்பூர்:
கடத்தூரில் கடன் தொல்லையால் தொண்டு நிறுவன நிர்வாகி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தொண்டு நிறுவனம்
கடத்தூரை சேர்ந்தவர் ரகு (வயது 53). இவர் தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி, அதை நிர்வகித்து வந்தார். இவருடைய மனைவி சுமதி (48). இந்தநிலையில் ரகு 50 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு தலா ரூ.4 லட்சம் வீதம் வங்கியில் கடன் வாங்கி கொடுத்தார். ஆனால் கடன் பெற்ற மகளிர் சுய உதவிக்குழுவினர் அதனை முறையாக திருப்பி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ரூ.40 லட்சம் வங்கிக்கு செலுத்தப்படவில்லை என்று தெரிகிறது.
இந்தநிலையில் கடந்த மாதம் 29-ந் தேதி வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் ரகுவின் வீட்டுக்கு சென்று கடனை செலுத்துமாறு கூறினர். இதில் மனவேதனை அடைந்த ரகு, சுமதி தற்கொலை செய்து கொள்ள எண்ணினர். இந்தநிலையில் சுமதி பால் வாங்க வெளியே சென்றார்.
தற்கொலை
பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது, ரகு விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரகுவை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரகு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கடத்தூர் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட ரகுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கடன் தொல்லையால் தொண்டு நிறுவன நிர்வாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.