போலீசுக்கு பயந்து தொழிலாளி தற்கொலை
சூளகிரி அருகே பாலியல் பலாத்காரம் செய்ததில் பள்ளி மாணவி கர்ப்பமானார். இதனால் போலீசுக்கு பயந்து சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சூளகிரி
சூளகிரி அருகே பாலியல் பலாத்காரம் செய்ததில் பள்ளி மாணவி கர்ப்பமானார். இதனால் போலீசுக்கு பயந்து சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாணவி கர்ப்பம்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது பள்ளி மாணவி. இவரது உடல் நிலையில் கடந்த சில நாட்களாக மாற்றம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது மாணவி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதனால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக அவர்கள் சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது கர்னப்பள்ளியை சேர்ந்த உறவினரான கூலித்தொழிலாளி முனிரத்தினம் (வயது 44) தன்னை அடிக்கடி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் மாணவி கூறினார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இது குறித்து மாணவியின் உறவினர்கள், ஓசூர் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தொழிலாளி முனிரத்தினத்தை தேடி வந்தனர். இதனிடையே போலீசுக்கு பயந்து முனிரத்தினம் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இந்த நிலையில் கர்னூர் அருகே காட்டுப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் நேற்று முன்தினம் மாலை முனிரத்தினம் தூக்கில் பிணமாக தொங்கினார். சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் தன்னை போலீசார் கைது செய்து விடுவார்கள் என்று பயந்து அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
போலீசார் விசாரணை
இதையடுத்து சூளகிரி போலீசார் விரைந்து சென்று முனிரத்தினத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூளகிரி அருகே 14 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய 44 வயது தொழிலாளி போலீசுக்கு பயந்து, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.