பாலியல் தொல்லையால் கல்லூரி மாணவி தற்கொலை- உடன்படித்த மாணவர் உள்பட 2 பேர் கைது
பாலியல் தொல்லையால் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக உடன்படித்த மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடி
பாலியல் தொல்லையால் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக உடன்படித்த மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கல்லூரி மாணவி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது மாணவி, தேவகோட்டை அருகே உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
காரைக்குடி பாரதிநகரை சேர்ந்தவர் பசுபதி (22), தேவகோட்டையை சேர்ந்தவர் பாலகணேஷ் (19). இருவரும் நண்பர்கள். இதில் பாலகணேஷ், அந்த மாணவியுடன் படித்து வந்த வகுப்பு தோழன் ஆவார். பாலகணேஷ் மூலமாக அவருடைய நண்பரான பசுபதியும் மாணவிக்கு அறிமுகமாகி இருக்கிறார்.
பாலியல் தொல்லை
இந்தநிலையில் மாணவி, அந்த 2 பேரிடமும் நட்பு ரீதியாக பழகி வந்துள்ளார். ஆனால், நட்பை தவறாக பயன்படுத்தி அந்த 2 பேரும் பல நாட்களாக மாணவியை தனிமையில் சந்திக்க வருமாறு வற்புறுத்தி, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளதாகவும், ஆனால் மாணவி அதற்கு மறுத்து வந்ததாகவும் தெரியவருகிறது.
இதனால் மாணவிக்கு 2 பேரும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளான அந்த மாணவி, விபரீதமாக தற்கொலை முடிவெடுத்து, எலி பேஸ்டினை (விஷம்) தின்றுவிட்டார். இதனை மறுநாளே அவருடைய குடும்பத்தினர் அறிந்தனர். மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த மாணவியை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
2 பேர் கைது
இதுகுறித்து காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவின்பேரில் காரைக்குடி தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்தார். மாணவி தற்கொலை சம்பவம் தொடர்பாக பசுபதி, பாலகணேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, திருப்பத்தூர் சிறையில் அடைத்தனர்.