தர்மபுரி அருகே நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவி விஷம் தின்று தற்கொலை
தர்மபுரி:
தர்மபுரி அருகே நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி, விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார்.
மாணவி
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள பொப்பிடி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி மணிமேகலை. இந்த தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருந்தனர். இதில் மூத்த மகளான மகாலட்சுமி (வயது 19), பிளஸ்-2 முடித்து விட்டு, தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார்.
இந்த மாணவியின் அண்ணன் முறையானவர் பாப்பாரப்பட்டி திருமல்வாடியை சேர்ந்த நவீன்குமார் (20). இவர் தர்மபுரியில் டிப்ளமோ நர்சிங் படித்து வந்தார். இதனால் மகாலட்சுமியும், நவீன்குமாரும் ஒன்றாக தர்மபுரிக்கு சென்று வந்தனர். இதனிடையே கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நவீன்குமார் திடீரென விஷம் குடித்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
விஷம் தின்றார்
இந்தநிலையில் நவீன்குமார் விஷம் குடித்ததற்கான காரணம் குறித்து மகாலட்சுமியிடம், அவருடைய பெற்றோர் விசாரித்தனர். மேலும் காரணம் குறித்து அடிக்கடி கேட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த மகாலட்சுமி கடந்த 3-ந் தேதி வீட்டில் இருந்த எலி பேஸ்டை (விஷம்) தின்றார். மேலும் அவர் இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்கவில்லை.
அதன்பிறகு 2 நாட்கள் கழித்து திடீரென அவர் மயங்கினார். அவரை குடும்பத்தினர் மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது, மகாலட்சுமி எலி பேஸ்டை தின்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
தற்கொலை
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு மகாலட்சுமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மாரண்டஅள்ளி போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மாணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்தனர்.
டாக்டர் ஆகும் கனவுடன் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி விஷம் தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.