தறி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
சங்ககிரி அருகே ‘வாழப்பிடிக்கவில்லை’ என மாமியாரிடம் செல்போனில் கூறிவிட்டு தறி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சங்ககிரி
எடப்பாடி அருகே உள்ள சித்தூர் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 45), தறி தொழிலாளி. இவருக்கு வெண்ணிலா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்தநிலையில் குமார் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியுடன் சண்டை போட்டு உள்ளார். இந்த நிலையில் அவர் கடந்த 6 மாத காலமாக சங்ககிரி ஊஞ்சகொரை தறி பட்டறையிலேயே தங்கி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாமியார் இந்திராணிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு, 'எனக்கு மனது சரியில்லை, வாழப்பிடிக்கவில்லை நீங்கள் இன்று (ேநற்று) காலை வந்து எனது உடலை எடுத்து போய் அடக்கம் செய்து விடுங்கள்' என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டார். அதன்பிறகு மாமியார் மற்றும் மனைவி பலமுறை போன் செய்தும் குமார் செல்போனை எடுக்கவில்லை. உடனடியாக மனைவி மற்றும் உறவினர்களுடன் புறப்பட்டு வந்து தறிபட்டறையில் குமார் தங்கி இருந்த வீட்டுக்கு வந்து பார்த்தனர். அங்கு குமார் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சங்ககிரி போலீசில் மனைவி வெண்ணிலா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.