திருமணமான 7 மாதங்களில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
பாலக்கோடு:
மகேந்திரமங்கலம் அருகே திருமணமான 7 மாதங்களில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
கர்ப்பிணி
தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே உள்ள தெத்துபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். கூலித்தொழிலாளி. இவருக்கும், ஜக்கசமுத்திரம் அருகே உள்ள முள்ளாபுதூர் கிராமத்தை சேர்ந்த சவுந்தர்யா (வயது 19) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.
சவுந்தர்யா தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதனிடையே கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த சில நாட்களாக சவுந்தர்யா மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை
இந்தநிலையில் நேற்று காலை ஆனந்தன் கூலி வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் சவுந்தர்யா மட்டும் தனியாக இருந்தார். அப்போது திடீரென அவர் வீட்டின் பின்புறம் சென்று அங்குள்ள புளிய மரத்தில்தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மகேந்திரமங்கலம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சவுந்தர்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவுசெய்தனர்.
திருமணமாகி 7 மாதங்களே ஆவதால் சுவுந்தர்யா தற்கொலை குறித்து தர்மபுரி உதவி கலெக்டர் கீதாராணி விசாரணை நடத்திவருகிறார். திருமணமான 7 மாதத்தில் 3 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.