கள்ளத்தொடர்பை மனைவி கைவிடாததால் வேதனை:கோர்ட்டு ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலைஉருக்கமாக பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரல்
கிருஷ்ணகிரி
கள்ளத்தொடர்பை மனைவி கைவிடாததால் வேதனை அடைந்த கோர்ட்டு ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர் தற்கொலைக்கு முன்பு உருக்கமாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோர்ட்டு ஊழியர்
கிருஷ்ணகிரி அருகே உள்ள தேவசமுத்திரத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 38). கிருஷ்ணகிரி கோர்ட்டு ஊழியர். இவரது மனைவிக்கும், சதீஷ் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதை சுதாகர் கண்டித்து வந்துள்ளார்.
இருப்பினும் அவர் கள்ளக்காதலை தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுதாகர், கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வீடியோ வைரல்
அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று சுதாகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே சுதாகர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எனது சாவிற்கு எனது மனைவியும், அவரது கள்ளக்காதலன் சதீசும் தான் காரணம் என்று கூறும் உருக்கமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் கிருஷ்ணகிரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.