ஓசூர் அருகே அழுகிய நிலையில் பெண் பிணம்:போலீசுக்கு பயந்து முதியவர் தற்கொலை முயற்சி
ஓசூர்:
ஓசூர் அருகே பெண்ணை கொன்ற முதியவர் ேபாலீஸ் விசாரணைக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அழுகிய நிலையில் பெண் பிணம்
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அருகே சென்னசந்திரம் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கடந்த 7-ந்தேதி 40 வயது பெண் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அந்த பெண்ணின் உடல் நிர்வாண நிலையிலும், உடல் அருகே காலி மதுபாட்டில்களும் கிடந்தன. இது குறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையை சேர்ந்த ஆட்டு வியாபாரி பூங்கொடி (வயது 48) என்பதும், கள்ளத்தொடர்பு விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக பாகலூர் அருகே மாரசந்திரம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசப்பா (65) என்பவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
தற்கொலை முயற்சி
அப்போது பூங்கொடிக்கும், வெங்கடேசப்பாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததும், இந்த விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இந்த நிலையில் வெங்கடேசப்பா போலீசாரின் விசாரணைக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்கு பிறகு அவரிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அதன்பிறகே பூங்கொடி கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.