சூளகிரியில்அவசர சிகிச்சை மையம் மேம்படுத்தப்படுமா?பொதுமக்கள் எதிர்பார்ப்பு
சூளகிரியில் உள்ள அவசர சிகிச்சை மையம் மேம்படுத்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலை
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி நகரானது கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மையப்பகுதியில் அமைந்துள்ளது. சூளகிரி போலீஸ் நிலைய எல்லையில் மேலுமலை கணவாய் முதல் கோபசந்திரம் வரையில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் உள்ளன.
தமிழகத்திலேயே அதிக விபத்துகள் நடைபெறும் இடமாக இந்த தேசிய நெடுஞ்சாலை உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுதோறும் சுமார் 50 பேர் சூளகிரி போலீஸ் நிலைய எல்லையில் விபத்தில் சிக்கி உயிர் இழக்கிறார்கள். மேலும் 200-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைகிறார்கள்.
அவசர சிகிச்சை மையம்
இந்த பகுதியில் விபத்துகளில் சிக்குபவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்க வசதியாக சூளகிரியில் 24 மணி நேர அவசர சிகிச்சை மையம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த சிகிச்சை மையத்தின் மூலம் சூளகிரி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன் அடைந்து வந்தனர்.
குறிப்பாக சூளகிரி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளில் சிக்குபவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் மையமாக இது செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான பேர் விபத்துகளில் இருந்து மீட்கப்பட்டு, முதலுதவி சிகிச்சையில் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
4 ஆயிரம் பேர் சிகிச்சை
வாகன விபத்துகளில சிக்குபவர்கள், கர்ப்பிணிகள், முதியோர்கள் என அனைத்து தரப்பினருக்கும் சிகிச்சை அளிக்கும் மையமாக இது விளங்குகிறது. இங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு மேல் சிகிச்சைக்காக போலுப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இங்கு சிகிச்சை பெற்றுள்ள நிலையில், இந்த அவசர சிகிச்சை மையத்தை மூட உள்ளதாக சூளகிரி பகுதி மக்களிடம் ஒருவித தகவல் பரவி வருகிறது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொதுமக்கள் பயன் பெறும் இந்த சிகிச்சை மையத்தை மூடாமல், மேம்படுத்தி தர வேண்டும் என்று சூளகிரி பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் விவரம் வருமாறு:-
கூடுதல் வசதிகள்
சூளகிரியை சேர்ந்த சமூக ஆர்வலர் லோகேஷ்:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி தான் அதிக தேசிய நெடுஞ்சாலையை கொண்ட பகுதியாகும். இங்கு நாள்தோறும் 5-க்கும் மேற்பட்ட விபத்துகள் நடக்கின்றன. பல உயிர் இழப்புகளும் ஏற்படுகின்றன. இந்த பகுதியில் விபத்துக்களில் காயமடைபவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக தொடங்கப்பட்ட 24 மணி நேர அவசர சிகிச்சை மையத்திற்கு கூடுதல் வசதிகள் செய்து மேம்படுத்த வேண்டும்.
மருத்துவ பணியாளர்கள்
சூளகிரி பகுதியை சேர்ந்த சந்திரசேகர்:-
சூளகிரி பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும் விபத்துகள் நடந்தன. கடந்த 2016-ல் மட்டும் 3 பெரிய விபத்துக்களை சூளகிரி சந்தித்துள்ளன. அதில் ஒரு விபத்தில் 20 பேரும் மற்ற 2 விபத்துகளில் தலா 8 பேரும் என மொத்தம் 36 பேர் இறந்துள்ளனர். இதை போல பல்வேறு கோர விபத்துக்கள் சூளகிரி பகுதியில் நடந்துள்ளன.
இந்த பகுதிக்கு 24 மணி நேர அவசர சிகிச்சை மையம் அவசியம் தேவையாகும். தற்போது உள்ள சிகிச்சை மையத்திற்கு கூடுதல் மருத்துவ வசதிகள் செய்து மருத்துவ பணியாளர்களை நியமித்து உயிர்களை காக்க வேண்டும்
மேம்படுத்த வேண்டும்
உத்தனப்பள்ளியை சேர்ந்த சிவராஜ்:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 30 கிலோ மீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலையை கொண்ட பகுதி சூளகிரி தான். விபத்துகள் அதிகம் நடக்கும் இடமும் சூளகிரி தான். ஆண்டுதோறும் சூளகிரியில் தான் அதிக விபத்துகள், உயிர் இழப்புகள் நடப்பதாக காவல்துறை மற்றும் போக்குவரத்து துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இங்குள்ள 24 மணி நேர அவசர சிகிச்சை மையத்தை மேம்படுத்தினால் பல உயிர்கள் காக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.