சின்ன வெங்காயம் அறுவடை மும்முரம்


சின்ன வெங்காயம் அறுவடை மும்முரம்
x
திருப்பூர்


குண்டடம் பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரு கிேலா ரூ.45-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

சின்ன வெங்காய சாகுபடி

குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதி என்பதால் குண்டடம் சூரியநல்லூர், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி, வெறுவேடம்பாளையம், குங்குமம்பாளையம், ஒத்தக்கடை, உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர்செய்கின்றனர். அதன்படி சின்னவெங்காய பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.

இது குறித்து விவசாயி குமார் கூறியதாவது;-

குண்டடம் பகுதி பொதுவாகவே வறட்சியான பகுதி என்பதால் குறைத்த அளவு தண்ணீரை கொண்டு நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை விவசாயம் செய்துவருகிறோம். கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழை மற்றும் பி.ஏ.பி.பாசனத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் அதிகப்படியான அளவில் தக்காளி, மிளகாய், கத்திரி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பயிர்செய்துவருகிறோம், இந்தப்பயிர்களுக்கு ஏற்ற நிலம் என்பதால் நல்ல மகசூல் தருகிறது.

கடந்த ஆண்டு சின்னவெங்காயம் பயிர்செய்தபோது நல்ல விலைக்கு விற்பனையானது. இதனால் இப்பகுதி விவசாயிகள் சின்ன வெங்காய பயிர்களை அதிகளவில் பயிர்செய்துள்ளனர். இதில் கோ ஆன் 5 மற்றும் ஒடிசா நாற்று ரகங்களை பயிர்செய்ய 1 ஏக்கருக்கு விதைகள், கூலி, களை எடுத்தால், இடுபொருட்கள் உள்பட ஏக்கருக்கு ரூ.75ஆயிரம் வரை செலவாகிறது.

ஏற்றுமதி

இந்த நிலையில் சின்ன வெங்காய பயிர்கள் 100 நாட்கள் முடிவடைந்த நிலையில் அறுவடை செய்துவருகின்றனர். தற்போது சின்ன வெங்காயம் கிலோ ரூ.30 முதல் ரூ.45 வரை விற்பனை செய்யப்படுகிறது..

தண்ணீர் கிடைத்து நல்ல விவசாயம் செய்தால் நல்ல விலை கிடைப்பதில்லை. எனவே அரசு முன்வந்து விவசாயிகள் பாதிக்காத வகையில் உரிய விலையை நிர்ணயத்து சின்ன வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி வழங்கினால் நல்ல விலை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்றவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story