கோடை சாகுபடிக்கு தேவையான விதை நெல் இருப்பில் உள்ளது


கோடை சாகுபடிக்கு தேவையான விதை நெல் இருப்பில் உள்ளது
x

திருவாரூர் மாவட்டத்தில் கோடை சாகுபடிக்கு தேவையான விதை நெல்கள் இருப்பில் உள்ளதாக வேளாண்மை இணை இயக்குனர் லட்சுமிகாந்தன் கூறியுள்ளாா்.

திருவாரூர்

திருவாரூர்;

திருவாரூர் மாவட்டத்தில் கோடை சாகுபடிக்கு தேவையான விதை நெல்கள் இருப்பில் உள்ளதாக வேளாண்மை இணை இயக்குனர் லட்சுமிகாந்தன் கூறியுள்ளாா்.

குறுவை சாகுபடி

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் விளங்கி வருகின்றன. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் பாசனத்துக்காக மேட்டூர் அணை ஜூன் மாதம் 12-ந்தேதி திறக்கப்படுவது வழக்கம். அதன்படி குறிப்பிட்ட தேதியில் அணையில் இருந்து தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரித்து காணப்படும். தாமதமாக திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரித்து காணப்படும்.

விதை நெல்

தற்போது வரை மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது. இதனால் குறுவை சாகுபடி இந்த ஆண்டும் அதிக அளவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கோடை நெல் சாகுபடிக்கான உழவு பணிகள் நடந்து வருகிறது.ஆழ்குழாய் மூலம் சாகுபடி செய்து வருபவர்களுக்கு தற்போது மழை பெய்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஆண்டை போல் கோடை நெல்லான குறுவை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வமாக இருந்து வருகின்றனர். இதற்காக அவர்கள் விதைதேர்வில் தீவிரம் காட்டி வருகின்றனர். விவசாயிகளின் தேவைக்காக அரசு வேளாண் விற்பனை கிடங்கு, தனியார் கடைகள் ஆகியவைகள் டன் கணக்கில் விதைநெல்களை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகிறது.

விற்பனையாளர்கள்

திருவாரூர் மாவட்டத்தில் 165 விதை நெல் மற்றும் இடுஉரம் விற்பனை கடைகள் உள்ளன. அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள 85 வேளாண் விற்பனை கிடங்குகளில் விதைநெல் விற்பனை செய்யப்படுகிறது. தனியார் விதைகள் விற்பனை கடைகள் அனைத்திலும் விதைநெல் மூட்டைகள் லாரிகள் மூலம் கொண்டு வந்து இறக்கிய வண்ணம் உள்ளன. விதைநெல் அனைத்தும் 1 கிலோ ரூ.40 முதல் விற்கப்படுகிறது.மேலும் விதைகள் தேவை அதிகரித்தால் வெளியூர்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று விதை நெல்விற்பனையாளர்கள் கூறினா்.

போதிய அளவு

இதுகுறித்து வேளாண் இணை இயக்குனர் (பொ) லட்சுமிகாந்தன் கூறியதாவது:-

கடந்த ஆண்டை போலவே நடப்பாண்டிலும் சுமார் 1.25 லட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி எதிர்பார்க்கப்படுகிறது. நீர் இருப்பு, பருவ மழை வரத்தை பொறுத்து இலக்கு அதிகரிக்கலாம். இந்த நிலையில் குறுவைக்கு தேவையான விதை நெல் 175 டன் இருப்பு உள்ளது. ஜூன் முதல் வாரத்தில் இருப்பு 350 டன்னாக அதிகரிக்கப்படும். இப்போது டி.பி.எஸ். 5, கோ 51, ஆடுதுறை 43, 53 ஆகிய விதைநெல் இருப்பில் உள்ளது.இதில் டி.பி.எஸ். மட்டும் மோட்டா ரகம். மற்ற அனைத்தும் 115 நாட்கள் வயதுடையது. குறுவை சாகுபடி தேவைக்கு அஸோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, விதை நேர்த்திக்கு சூடோமோனாஸ் ஆகியவை போதிய அளவில் இருப்பில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினாா்.


Next Story