கன்னியாகுமரியில் கோடை விடுமுறை சீசன் தொடங்கியது


கன்னியாகுமரியில்  கோடை விடுமுறை சீசன் தொடங்கியது
x

கன்னியாகுமரியில் கோடைவிடுமுறை சீசன் தொடங்கியதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

கன்னியாகுமரி

தென்தாமரைகுளம்,

கன்னியாகுமரியில் கோடைவிடுமுறை சீசன் தொடங்கியதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

கோடை விடுமுறை சீசன்

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். தமிழ் புத்தாண்டு விடுமுறை மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமை என தொடர் விடுமுறை என்பதாலும், பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர்.

அதன்படி நேற்று அதிகாலையிலேயே சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தந்தனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் திரண்டு சூரியன் உதயமாகும் காட்சியை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். பலர் தங்களது செல்போன்களில் படம் பிடித்து மகிழ்ந்தனர்.

நீண்ட வரிசையில்...

அதைதொடர்ந்து முக்கடல் சங்மத்தில் புனிதநீராடி பகவதியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதனால், பகவதியம்மன் கோவிலில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

பின்னர், அவர்கள் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியதும் உற்சாகத்துன் படகில் சென்று விவேகானந்தர் மண்டபம், திருவள்ளவர் சிலையை கண்டு ரசித்து விட்டு திரும்பினர்.

வியாபாரிகள் மகிழ்ச்சி

இதேபோல் காந்தி மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு பழத்தோட்டம், சுற்றுச்சூழல் பூங்கா, சன்செட் பா யிண்ட் கடற்கரை பகுதி உள்பட அனைத்து இடங்களிலும் காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர்காற்று வீசியது. இதனால் கோடை வெப்பத்தை தணிக்க கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்தனர். அவர்கள் கடற்கரையில் அமர்ந்து அலையின் அழகை ரசித்தனர். பலர் கடலில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

இதனால், கன்னியாகுமரியில் கோடை சீசன் தொடங்கியது. வியாபாரிகளும் சுற்றுலா பயணிகளின் கூட்டத்தால் மகிழ்ச்சி அடைந்தனர். கூட்டம் காரணமாக கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story