கோடை நெல் சாகுபடி பணிகள் தீவிரம்
திருவாரூர் மாவட்டத்தில் கோடை நெல் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது .
திருவாரூர் மாவட்டத்தில் கோடை நெல் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது .
முப்போகம் சாகுபடி
திருவாரூர் மாவட்டத்தில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இது தவிர பெரும்பாலானோர் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். மாடுகளை வளர்த்து பால் விற்பனை, ஆடுகளை இறைச்சிக்காக விற்பனை மற்றும் இயற்கை உர உற்பத்தி மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர்.
திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். ஆனால் கடந்த ஆண்டு மேட்டூர் அணை முன்கூட்டியே மே மாதத்தில் திறக்கப்பட்டது.
மேட்டூர் அணை
இதனால் குறுவை, சம்பா, தாளடி சாகுபடி எதிர்பார்த்ததை விட அதிக அளவு நடைபெற்றது. இந்த ஆண்டு மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பதால் வழக்கம் போல் அணை திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து முன்பட்ட குறுவை எனப்படும் கோடை நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆழ்துளை கிணறு மூலம் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வரும் விவசாயிகள் தற்போது முன்பட்ட குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வயலில் உழவு செய்து நடவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
8 ஆயிரம் ஏக்கர்
மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 8 ஆயிரம் ஏக்கரில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. திருவாரூர், நீடாமங்கலம், கூத்தாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கோடை நெல் சாகுபடி பணிகள் தீவிரமாக நடந்தது வருகிறது. இதே போல் பருத்தி சாகுபடியிலும் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு 13 ஆயிரம் எக்டேரில் பருத்தி சாகுபடி செய்யபட்டிருந்தது. இந்த ஆண்டு 3 ஆயிரம் எக்டேர் கூடுதலாக 16 ஆயிரம் எக்டேர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.வலங்கைமான், குடவாசல் பகுதியில் அதிகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ள பகுதிகளில் களை எடுக்கும் பணிகள், உரம் இடும் பணிகளில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். எள், உளுந்து, பயறு ஆகியவை கடந்த ஆண்டை காட்டிலும் அதிக அளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. எள் கடந்த ஆண்டில் இருந்து ஆயிரம் எக்டேர் கூடுதலாக சாகுபடி செய்து 4 ஆயிரத்து 700 எக்டேரில் சாகுபடி செய்துள்ளனர்.
20 எக்டேரில் சிறுதானியம்
சோயா பீன்ஸ் கடந்த ஆண்டு 10 எக்டேர் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டு 30 எக்டோ் அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறுகயைில், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அனைத்து பயர்களும் கூடுதலாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
சிறுதானிய ஆண்டையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் முதன்முறையாக சிறு தானிய சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ராகி, மக்கா சோளம் சுமார் 20 எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சிறுதானிய பயிர்களை சாகுபடி செய்து உள்ள விவசாயிகளை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஆண்டுகளில் கூடுதல் பரப்பளவில் சாகுபடி செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.