மழை வருமா? என்று எதிர்பார்ப்பு: கொளுத்தும் வெயிலால் வாடும் பொதுமக்கள்- குளிர்பானக்கடைகளுக்கு மவுசு
ஈரோட்டில் கொளுத்தும் வெயிலால் வாடும் பொதுமக்கள் குளிர்பானக்கடைகளை தேடிச்செல்கிறார்கள். மழை வருமா என்று ஈரோடு பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
ஈரோட்டில் கொளுத்தும் வெயிலால் வாடும் பொதுமக்கள் குளிர்பானக்கடைகளை தேடிச்செல்கிறார்கள். மழை வருமா என்று ஈரோடு பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
மழை மறைவு
தமிழ்நாட்டில் கோடை வெயில் கடுமையாக வாட்டி வருகிறது. கோடையிலும் சற்று குளிர்ச்சி தரும் வகையில் பல்வேறு இடங்களில் மழை பெய்கிறது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக ஏதேனும் ஒரு இடத்தில் மழை பதிவாகிறது. தாளவாடி, சத்தியமங்கலம், கோபி, அந்தியூர் என்று பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. ஆனால் ஒரு துளி கூட மழை இல்லை என்கிற அளவுக்கு மழை மறைவு பகுதியாக ஈரோடு உள்ளது.
மழைதான் இல்லை, சற்று மிதமான வெயில் அடிக்கிறதா என்றால் அதுவும் இல்லை. ஒரு வாரமாக வெப்பத்தின் அளவு 100 டிகிரி செல்சியஸ் அளவை தொட்டும், கடந்தும் பதிவாகி வருகிறது. வெப்பத்தின் தாக்கம் 100 டிகிரிக்கும் அதிகமாகவே இருக்கிறது.
100 டிகிரி
நேற்று ஈரோட்டில் 100 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகி இருந்தது. வெயிலில் மரங்கள், செடி, கொடிகள், புல் பூண்டுகள் வாடுவதை போல பொதுமக்கள் வாடுகிறார்கள். ஆத்திர, அவசியங்களுக்கு வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் சிறிது நேரம் கூட வீதியில் நிற்க முடியாத அளவுக்கு வெயில் வாட்டுகிறது. சாலைகளில் செல்வோர் நடந்து செல்ல முடியாத அளவுக்கு சிரமத்தை அனுபவிக்கிறார்கள்.
இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சிக்னல்களில் சில வினாடிகள் நிற்கிறபோது வெயிலில் கருகிவிடுவோமோ என்கிற அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் உள்ளது. அனல் காற்று வீசுகிறது. வென்னீரை எடுத்து முகத்தில் ஊற்றியதுபோன்று வெப்பக்காற்று முகத்தில் அடித்துச்செல்கிறது.
குளிர்பான கடைகள்
இதனால் குளிர்பான கடைகளுக்கு மவுசு அதிகரித்து உள்ளது. இளநீர், பதநீர், நன்னாரி சர்பத், தர்பூசணி உள்ளிட்ட குளிர்பான கடைகளில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக நின்று தாகம் தீர்த்து வருகிறார்கள். மாணவ-மாணவிகள், அலுவலகம் செல்பவர்கள் என்று அனைத்து தரப்பினரும் நேற்று பகல் நேரத்தில் சாலையோர கடைகளில் குவிந்தனர். சாலையில் நடந்து சென்ற பெண்கள் பலரும் குடைகள் பிடித்தபடி சென்றனர். 2 சக்கர வாகனங்களில் சென்றவர்கள் துப்பட்டாவை தலையில் போர்த்தி சென்றனர். பகல் நேரத்தில் கட்டிடத்தின் நிழல், மரங்களின் நிழல் கூட விழாத அளவுக்கு உச்சி வெயிலின் தாக்கம் இருந்தது. இதனால் நிழலில் ஒதுங்க முடியாமல் பலரும் சிரமப்பட்டனர்.
மழை வருமா?
கடைவீதிகளில் வாகனங்களை நிறுத்திச்சென்றவர்கள், சில நிமிடங்கள் கழித்து வந்து எடுத்தாலும் வாகன இருக்கைகள் அடுப்பில் வைத்து சுட்டதுபோன்று சூடாகி கொதித்துப்போய் இருந்தன.
வெயிலின் தாக்கம் மாலை 5 மணி வரை இருந்தது. ஆனால் தொடர்ந்து வெப்பம் தாக்கியது. இரவில் வீடுகளுக்குள் இருக்க முடியாத அளவுக்கு வெப்பம் வாட்டியது. ஏ.சி.எந்திரங்கள் வைத்திருந்தால் மட்டுமே வீடுகளுக்குள் சற்று நிம்மதியாக இருக்க முடியும் என்ற நிலையும் இருந்தது. இந்த வேதனை தீர, மழை பெய்ய வேண்டும். எனவே ஈரோட்டுக்கு ஒரு மழை பெய்யுமா என்று ஈரோட்டு மக்கள் வானத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.