கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம்- திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்


கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம்- திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல்
x

கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் நடைபெற உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்

பயிற்சி முகாம்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாணவ, மாணவியர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோடை கால சிறப்பு விளையாட்டு பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் அதிகமானோர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருவது கவலை அளிக்கிறது. மாணவர்களை விளையாட்டு போட்டிகளில் ஈடுபட வைப்பதன் மூலம் இத்தகைய தீய பழக்கங்களுக்கு அடிமையாகும் செயல்பாடுகளில் இருந்து மாணவர்களை தடுக்கலாம் என்ற சிந்தனையின் அடிப்படையில் 15 நாட்கள் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தடகளம், கால்பந்து, கபடி

இந்த முகாமில் 15 நாட்கள் மாணவர்களுக்கு இலவசமாக தங்குமிடம், உணவு, பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்படும்.

இந்த பயிற்சி முகாமில் தடகளம், கால்பந்து, கபடி போன்ற விளையாட்டுப் போட்டிகளுக்கு முக்கியதுவம் அளிக்கப்படும். 200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் சார்பாக செய்யப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்கு திருவள்ளூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று (திங்கட்கிழமை) மற்றும் நாளை (செவ்வாய்க்கிழமை) பயிற்சி தேர்வுகள் நடைபெற உள்ளது.

திறமைகளை கண்டறிய

இந்த பயிற்சி தேர்வில் 10 முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் தங்கள் ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் பதிவு செய்து கொள்ளலாம். தேர்வில் கலந்து கொள்வதற்கான அறிவுரைகள் சமூக வலைதளம் மற்றும் சுற்றறிக்கை மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி முகாமிற்கு கால்பந்தில் இந்திய அணிக்காக பலமுறை விளையாடிய விளையாட்டு வீரர் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த முகாமில் திறமையான மாணவர்கள் கண்டறியப்பட உள்ளனர். இந்த வாய்ப்பினை 10 முதல் 17 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவ, மாணவியர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

1 More update

Next Story