காட்டு யானைகளை விரட்ட மேலும் 2 கும்கிகள் வரவழைப்பு


காட்டு யானைகளை விரட்ட மேலும் 2 கும்கிகள் வரவழைப்பு
x

கூடலூர் அருகே காட்டு யானைகள் தாக்கி 2 பேர் பலியாகினர். அவற்றை விரட்ட மேலும் 2 கும்கிகள் வரவழைக்கப்பட்டு உள்ளன.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர் அருகே காட்டு யானைகள் தாக்கி 2 பேர் பலியாகினர். அவற்றை விரட்ட மேலும் 2 கும்கிகள் வரவழைக்கப்பட்டு உள்ளன.

2 பேர் பலி

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுப்பாறை பகுதியை சேர்ந்த டீக்கடைக்காரர் ஆனந்தகுமார் (வயது 43). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் முதுமலையில் இருந்து சீனிவாசன், விஜய் உள்ளிட்ட கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு காட்டு யானையை விரட்டும் பணி முடுக்கி விடப்பட்டது. இதேபோன்று ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பாரம் பகுதியை சேர்ந்தவர் மாலு என்ற மும்தாஜ் (40). இவர் கடந்த 27-ந் தேதி இரவு 9 மணிக்கு உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, தனது வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்கி யானைகள்

தொடர்ந்து காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. அதன்படி முதுமலையில் இருந்து கூடுதலாக சங்கர், கிருஷ்ணா ஆகிய 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளது. பாரம், 4-ம் நெம்பர் உள்பட பல இடங்களில் கும்கி யானைகள் உதவியுடன் காட்டு யானைகளை தேடி விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் டிரோன் மூலம் காட்டு யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதுதவிர காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் வசிக்கும் மக்களை உஷார் படுத்தி வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியில் பொதுமக்கள் தனியாக நடந்து செல்ல கூடாது. மேலும் யானைகளுக்கு பிடித்தமான பயிர்களை நடவு செய்யக் கூடாது. வீடுகளின் அருகே பலா மரங்கள் இருந்தால், அதில் விளைந்துள்ள காய்கள், பழங்களை அகற்ற வேண்டும். பலா பழங்களை சாப்பிடுவதற்காக காட்டு யானைகள் ஊருக்குள் வர வாய்ப்புள்ளது என்றனர்.


Next Story