சுந்தரானந்தர் சித்தர் குருபூஜை விழா
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுந்தரானந்தர் சித்தர் குருபூஜை விழா நடந்தது.
தமிழ் சித்தர் மரபில் பதினெண் சித்தர்களுள் ஒருவர் சுந்தரானந்தர். இவர் ஆவணி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் அவதரித்தவர். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடைய மதுரையம்பதியில் சுந்தரானந்தர் சித்தர் வாழ்ந்து, சித்துகள் பல புரிந்து முக்தியடைந்ததால் மேலும் சிறப்பு பெற்று திகழ்கிறது.
கிஷ்கிந்தையில் வாழ்ந்த நவகண்ட ரிஷியின் பேரன் என்றும், சட்டைமுனி சித்தரின் சீடர் என்றும் அறியப்பட்டவர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை வாங்கி, சதுரகிரியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். வாக்கிய ஆத்திரம், வைத்தியத்திரட்டு, தீட்சா விதி, சிவயோகஞானம் போன்ற பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவிலில் சுந்தரானந்த சித்தர் குருபூஜை விழா, பழைய திருக்கல்யாண மண்டபத்தில் நேற்று நடந்தது. அப்போது சுந்தரானந்த சித்தருக்கு திருமுறை பாராயணம், புஷ்பாஞ்சலி நடந்தது.
இதனைத்தொடர்ந்து எல்லாம் வல்ல சித்தர்கள் என்ற தலைப்பில் பேராசிரியர் ஞானசம்பந்தன் பேசினார். விழாவில் தமிழ் அறிஞர் மீனாட்சி சுந்தரத்தை கவுரவித்து பொற்கிழியை கலெக்டர் அனிஷ்சேகர், கோவில் தக்கார் கருமுத்துகண்ணன், மேயர் இந்திராணி உள்ளிட்ட பலர் வழங்கினார். அதன் பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.