பரமத்திவேலூரில் சுந்தரராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர், செட்டியார் தெருவில் உள்ள வல்லப விநாயகர் கோவிலில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜபெருமாள் மற்றும் கஜலட்சுமி ஆகிய சாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்றுமுன்தினம் காலையில் கோவில் சம்வத்சராபிஷேகமும், பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித தீர்த்தம் எடுத்து வருதலும், மாலை மகா கணபதி பூஜை, முதற்கால யாகபூஜையும், யாகவேள்வி நடைபெற்றது. நேற்று அதிகாலை இரண்டாம் கால யாக பூஜையும் மற்றும் மகாதீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் வல்லப விநாயகர், ஸ்ரீதேவி, பூதேவி, சமேத சுந்தரராஜபெருமாள், கஜலட்சுமி தாயாருக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.