நரியை பரியாக்கிய கோலத்தில் சுந்தரேசுவரர்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் நரியை பரியாக்கிய கோலத்தில் சுந்தரேசுவரர் காட்சி அளித்தார். மேலும் பிட்டுக்கு மண் சுமந்த லீலைக்காக இன்று வைகை ஆற்றில் புட்டுதோப்பு மண்டபத்தில் சுவாமி எழுந்தருள்கிறார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் நரியை பரியாக்கிய கோலத்தில் சுந்தரேசுவரர் காட்சி அளித்தார். மேலும் பிட்டுக்கு மண் சுமந்த லீலைக்காக இன்று வைகை ஆற்றில் புட்டுதோப்பு மண்டபத்தில் சுவாமி எழுந்தருள்கிறார்.
ஆவணி மூல திருவிழா
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் நேற்று மாலை நரியை பரியாக்கிய லீலை அலங்காரம் நடந்தது. அப்போது வடக்கு ஆடி வீதியில் உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரேசுவரர்-மீனாட்சி அம்மன், நரியை பரியாக்கிய லீலை அலங்காரத்தில் காட்சி அளித்தனர்.
பின்னர் சுவாமி-அம்மன் தங்கக்குதிரை வாகனங்களில் எழுந்தருளி ஆவணி மூல வீதிகளில் வலம் வந்தனர். விழாவில் பாண்டிய மன்னனாக செந்தில்பட்டர் குதிரையில் வந்து லீலை குறித்து பக்தர்களுக்கு விளக்கினார்.
இந்த திருவிழாவிற்காக திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து சுப்பிரமணியரும், திருவாதவூரில் இருந்து மாணிக்கவாசகரும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தனர்.
கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சுப்பிரமணியரும், மாணிக்கவாசகரும் வராமல் இந்த நிகழ்ச்சிகள் நடந்தன.
தற்போது கொரோனா கட்டுக்குள் இருப்பதால் 2 ஆண்டுகளுக்கு பிறகு நரியை பரியாக்கிய லீலையில் சுப்பிரமணியசுவாமியும் மாணிக்கவாசகரும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
புராண வரலாறு
விழாவில் நரியை பரியாக்கிய லீலை பற்றிய புராண வரலாறு வருமாறு:-
மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டிய மன்னரிடம் மாணிக்கவாசகர் 'தென்னவன் பிரம்மராயன்' என்ற பட்டத்துடன் அமைச்சராக பணியாற்றி வந்தார். அப்போது மன்னன் படைக்கு தேவைப்படும் குதிரைகள் வாங்குவதற்காக பெரும் பொருளுடன் மாணிக்கவாசகரை அனுப்பி வைத்தார். அவர் திருப்பெருந்துறை என்னும் தலத்தை அடைந்தவுடன் இறைவனை குருவாக பெற்ற மாணிக்கவாசகர், அங்கேயே சிவாலய திருப்பணி மற்றும் சிவனடியார் திருப்பணி என தான் கொண்டு வந்த அனைத்து பொருளையும் செலவிட்டார்.
இந்த நிலையில் அரசனிடமிருந்து அழைப்பு வந்தது. அப்போது எந்த பொருளும் இல்லாமல் வெறுங்கையாக இருந்த மாணிக்கவாசகர் செய்வதறியாது இறைவனை வேண்டினார். அப்போது இறைவன் அவரிடம், ஆவணி மூலத்தன்று குதிரைகள் வந்து சேரும் என்று அரசனிடம் கூறும்படி தெரிவித்தார். ஆவணி மூலத்திருநாளும் வந்தது. ஆனால் குதிரைகள் வராதது கண்டு மன்னன் மாணிக்கவாசகரை சிறையில் அடைத்து துன்புறுத்தினான்.
நரிகளை குதிரைகளாக்கினார்
மாணிக்கவாசகர் இறைவனிடம் தான் படும் வேதனைகள் குறித்து வேண்டினார். உடனே இறைவன் காட்டிலுள்ள நரிகளை எல்லாம் குதிரைகளாக்கி, சிவகணங்களை குதிரைகளின் பாகன்களாக்கி, தானே அவைகளுக்கு தலைவனாக ஒரு குதிரையின் மீதேறி மதுரைக்கு வந்தடைந்தார். அதை கண்ட அரசனும் மகிழ்ந்து மாணிக்கவாசகரை பாராட்டி விடுவித்தான்.
ஆனால் அன்றிரவே அந்த குதிரைகள் எல்லாம் மீண்டும் நரிகளாக மாறி காடுநோக்கி ஓடின. உடனே அரசன் மாணிக்கவாசகரை தண்டிக்க அவரை கட்டி ஆற்று சுடுமணலில் கிடக்க செய்தான். இறைவன் அவரை காக்கும் பொருட்டு வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்க செய்தார். மாணிக்கவாசகரின் மகிமையை உணர்ந்த பாண்டிய மன்னன், அவரை விடுவித்து மன்னிப்பு கோரியதாக புராண வரலாறு கூறுகிறது.
பிட்டுக்கு மண் சுமந்த லீலை
ஆவணி மூலத்திருவிழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடக்கிறது. இதற்காக சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி காலை 6 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பாடாகி வைகை ஆற்றின் தென்கரையில் உள்ள புட்டுத்தோப்பு மண்டபத்திற்கு செல்வார்கள்.
அங்கு மதியம் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் லீலை நடைபெறும்.
நடை சாத்தப்படும்
சுவாமி கோவிலில் இருந்து கிளம்பி இரவு மீண்டும் கோவிலுக்கு வரும் வரை நடைசாத்தப்பட்டு இருக்கும். அந்த நேரத்தில் பக்தர்கள் அனுமதி கிடையாது. சுவாமி இரவு கோவிலுக்கு வந்த பிறகு மீண்டும் நடை திறந்து பூஜைகள் நடைபெறும். 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் பிட்டு திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.