ஆடல், பாடல், பாரம்பரிய விளையாட்டுகளுடன் ஞாயிறு கொண்டாட்டம்


தஞ்சை பழைய கலெக்டர் அலுவலக சாலையில் ஆடல், பாடல், பாரம்பரிய விளையாட்டுகளுடன் ஞாயிறு கொண்டாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர்

தஞ்சை பழைய கலெக்டர் அலுவலக சாலையில் ஆடல், பாடல், பாரம்பரிய விளையாட்டுகளுடன் ஞாயிறு கொண்டாட்டம் நடைபெற்றது.

ஞாயிறு கொண்டாட்டம்

பொதுமக்களுக்கு மன மகிழ்ச்சி மற்றும் புத்துணர்வு அளிக்கும் விதமாக வயது வரம்பின்றியும் அனைவரும் ஒன்று கூடி கொண்டாடும் வகையில் தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி போன்ற மாவட்டங்களில் ஞாயிறு கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி போக்குவரத்து அதிகம் உள்ள சாலையை தேர்வு செய்து கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி தஞ்சையில் மாநகராட்சி மற்றும் தனியார் அறக்கட்டளை சார்பில், போக்குவரத்து மிகுந்த பழைய மாவட்ட கலெக்டர் அலுவலக சாலையில் காலை 6 மணி முதல் 9 மணி வரை ஞாயிறு கொண்டாட்டம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் முரசு கொட்டி தொடங்கி வைத்தார்.

ஆடல், பாடல் கொண்டாட்டம்

இந்த நிகழ்ச்சியில் ஆடல், பாடல், பாரம்பரிய விளையாட்டுகளான கும்பி பாட்டு, கோலி குண்டு, கிட்டிபுல், சதுரங்கம், ஆடுபுலி ஆட்டம் ஆடுதல், நொண்டி ஆட்டம் போன்று விளையாட்டுகளும், பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இதில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர்.

நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமானோர் கலந்து கொண்டு ஞாயிறு கொண்டாட்டத்தில் வயது வித்தியாசமின்றி ஆடிப்பாடி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சிக்காக காலை 6 மணி முதல் 9 மணி வரை தஞ்சை மாவட்ட பழைய கலெக்டர் அலுவலக சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


Next Story