காவல் உதவி செயலியை பயன்படுத்தி புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பேட்டி
குமரி மாவட்ட மக்கள் காவல் உதவி செயலியை பயன்படுத்தி புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறினார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்ட மக்கள் காவல் உதவி செயலியை பயன்படுத்தி புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறினார்.
3 ஆயிரம் ஓவியங்கள்
குமரி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஓவிய போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி மாவட்டம் முழுவதும் இருந்து 3,000 மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து அனுப்பி இருந்தனர். அந்த ஓவியங்களை நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள மண்டபத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது.
போலீஸ் சூப்பிரண்டு பார்வையிட்டார்
இதை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
மாணவர்கள் வரைந்த ஓவியங்களை ஒரு குழுவினர் ஆய்வு செய்து சிறந்த ஓவியத்தை தேர்வு செய்ய உள்ளனர். பொதுமக்கள் காவல் உதவி செயலி என்ற ஆப்பை பயன்படுத்தி புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
போலீஸ் நிலையங்களுக்கு நேரில் வந்து புகார் அளிப்பதை விட காவல் உதவி செயலி என்ற ஆப்பை பயன்படுத்தி கொள்ளலாம். அனைவரும் உடனடியாக உங்களது செல்போனில் இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இதில் அளிக்கப்படும் புகார்கள் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கூட செல்லும். அபராத தொகையும் இந்த செயலி மூலம் செலுத்தலாம். போலீஸ் நிலையங்களில் கிடைக்கும் அனைத்து தகவல்களையும் இந்த செயலி மூலம் பெறலாம்.
விசாரணை
பூதப்பாண்டி குளத்தில் மாணவன் ஆதில் பிணமாக கிடந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது கூடுதல் சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சிறிய தடயம் கிடைத்தால் கூட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.