சீர்காழி சட்டைநாதர் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
சிலைகள், செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்ட சீர்காழி சட்டைநாதர் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
திருவெண்காடு:
சிலைகள், செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்ட சீர்காழி சட்டைநாதர் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
சட்டைநாதர் கோவில்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பழமையான சட்டைநாதர் கோவில் உள்ளது. இங்கு 32 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த மாதம் (மே) மாதம் 24-ந் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதையொட்டி கோவிலில் திருப்பணிகள் நடந்து வருகின்றன.
கடந்த 16-ந் தேதி கோவிலில் யாகசாலை அமைப்பதற்காக மேற்கு கோபுர வாசல் நந்தவன பகுதியில் பள்ளம் தோண்டினர். அப்போது 22 ஐம்பொன்னாலான சிலைகளும், 55 பீடம் மற்றும் 462 செப்பேடுகள் மற்றும் பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனை அடுத்து ஐம்பொன் சிலைகளும் மற்றும் செப்பேடுகளும் அறையில் வைக்கப்பட்டு, தாசில்தார் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
முதன் முறையாக...
கடந்த 17-ந் தேதி இந்து சமய அறநிலையத்துறை ஓலைச்சுவடி பராமரிப்பு, பாதுகாப்பு நூலாக்க திட்ட குழுவை சேர்ந்த 6 பேர் சீர்காழி சட்டைநாதர் கோவிலுக்கு வந்து நிலத்துக்கு அடியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளை ஆய்வு செய்தனர். மேற்கொண்டார். அப்போது இதுவரை தமிழ்நாட்டில் ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட பதிகங்கள் கிடைத்து வந்ததாகவும், சீர்காழியில் தான் முதன்முறையாக செப்பேடுகளில் எழுதப்பட்ட பதிகங்கள் அதிக அளவு கிடைத்துள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பினர் தெரிவித்தனர்.
சூப்பிரண்டு ஆய்வு
விலைமதிப்பு மிக்க ஐம்பொன் சிலைகள் அங்கு வைக்கப்பட்டுள்ளதால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சாமி சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் பாதுகாப்பு கருதி கூடுதலாக இரும்பு கிரில் கேட் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஜவகர் ஆய்வு மேற்கொண்டார்.