பெருகிவரும் சைபர் குற்றங்களை தடுக்க பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா அறிவுரை


பெருகிவரும் சைபர் குற்றங்களை தடுக்க பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா அறிவுரை
x
தினத்தந்தி 8 Feb 2023 12:15 AM IST (Updated: 8 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெருகிவரும் சைபர் குற்றங்களை தடுக்க பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா அறிவுரை கூறியுள்ளார்.

விழுப்புரம்

விழிப்புணர்வு வாரம்

வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. கண்ணன் உத்தரவின்பேரில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா அறிவுறுத்தலின்பேரில் மாவட்ட சைபர்கிரைம் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு கோவிந்தராஜ் தலைமையில் பாதுகாப்பான இணையவழி பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு வாரம் தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி மாவட்டத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம், ரெயில் நிலையம், வணிக வளாகங்கள், இணையவழி மைய கடைகள், மகளிர் குழுக்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் சமூகவலைதளங்களில் போலீஸ் அதிகாரிகளை கொண்டு விழிப்புணர்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சைபர்கிரைம் குற்றங்கள் பெருகிவரும் வேளையில் பொதுமக்கள், தங்களது சொத்துக்களை விழிப்புடன் இருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறும், இதற்காக சில வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா அறிவுறுத்தியுள்ளார்.

பொதுமக்களுக்கு அறிவுரைகள்

அதன்படி அறிமுகம் இல்லாத நபர்களிடம் உங்களுடைய கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு எண், ஓடிபி போன்ற விவரங்களை பகிர்ந்துகொள்ள வேண்டாம். ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு, பகுதிநேர வேலைவாய்ப்பு என வரும் போலி லிங்க், விளம்பரங்களை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். இணையத்தில் தேடி போலியான கடன் செயலிகளை பதிவிறக்கம் செய்து முன்பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். நாப்டல், மீசோ போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி உங்களுக்கு பரிசுப்பொருள் விழுந்துள்ளதாக குறுஞ்செய்தி அல்லது தபால்களை நம்பி ஏமாறாதீர். ஓ.எல்.எக்ஸ். போன்ற இணையதளத்தை பயன்படுத்தி வாகனம், இதர பொருட்களை விற்பதாக வரும் விளம்பரங்களின் உண்மைத்தன்மை அறியாமல் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.

சமூகவலைதளங்களில் அறிமுகம் இல்லாதவர்களிடம் தகவல்களை பரிமாற்றம் செய்யக்கூடாது. உங்களுக்கு தெரிந்த நபர்களின் வங்கி கணக்கு எண்ணில் பண உதவி கேட்டு வரும் செய்திகளை நம்பி பண உதவி செய்ய வேண்டாம். தேவையற்ற லிங்க், குறுந்தகவல், செல்போன் அழைப்பு போன்றவற்றுக்கு எவ்வித பதிலும் அளிக்காமல் விடுவது நல்லது. இலவச வை-பை வசதிகளை பயன்படுத்தி உங்கள் வங்கி கணக்குடன் தொடர்புடைய பண பரிவர்த்தனையை தவிர்க்கவும்.

உணவு பார்சல்

மேலும் அறிமுகம் இல்லாத நபர்களின் வாட்ஸ்-அப், டெலிகிராம் மூலம் அனுப்பும் கியூஆர் கோடை ஸ்கேன் செய்யாதீர்கள். சில நிறுவனங்களின் பெயரில் நீங்கள் உணவு ஆர்டர் செய்யாமலேயே உங்களுக்கு உணவு பார்சல் வந்துள்ளதாகவும், அதனை ரத்து செய்ய தங்கள் செல்போனுக்கு வரும் ஓடிபி கேட்டால் தர வேண்டாம். உங்கள் உயர் அதிகாரிகளின் பெயரில் வாட்ஸ்-அப் மற்றும் சமூகவலைதளங்களில் அல்லது வெளிநாட்டில் இருந்து பரிசுப்பொருட்கள் அனுப்புவதாக கூறினால் நம்ப வேண்டாம். கூரியர் நிறுவனத்தில் இருந்து உங்கள் பெயருக்கு வந்த பார்சலில் போதைப்பொருட்கள் இருப்பதாகவும், அதனால் காவல்துறையில் இருந்து பேசுவதாக வரும் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம்.

மேற்கண்ட குற்றங்கள் ஏதேனும் நடந்திருந்தால் உடனடியாக 1930 என்ற இலவச எண்ணை தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம். அல்லது https:cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்கள் புகார்களை பதிவு செய்யலாம். இந்த தகவல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story