சைக்கிளில் சென்று ஆய்வு செய்த போலீஸ் சூப்பிரண்டு


சைக்கிளில் சென்று ஆய்வு செய்த போலீஸ் சூப்பிரண்டு
x

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்துக்கு சைக்கிளில் சென்று ஆய்வுசெய்தார்.

திருப்பத்தூர்

போலீசார் மீது புகார்

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கான குறை தீர்வுக்கூட்டம் நடக்கிறது. நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தின் போது நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் பணியாற்றக்கூடிய இன்ஸ்பெக்டர் முதல் காவலர்கள் வரை சரிவர தங்களது கடமையை செய்வதில்லை என்றும், புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் மனுக்களை வாங்காமலும், அப்படியே வாங்கினாலும் அந்த மனுக்கள் மீது வழக்குப்பதிவு செய்வதில்லை எனவும் மனு கொடுக்க வருபவர்களை மிரட்டுவதாகவும் பலர் புகார் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) நிலவழகனிடம் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.

இந்தநிலையில், திருப்பத்தூர் அருகே தாமலேரிமுத்தூர் மேம்பாலத்தையொட்டி உள்ள போலீஸ் சூப்பிரண்டு குடியிருப்பில் இருந்து நேற்று காலை 6.30 மணியளவில் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் சைக்கிளில் புறப்பட்டார். அவர் சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ள நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்துக்கு சைக்கிளிலேயே சென்றார்.

ஆயுதப்படைக்கு...

அப்போது இன்ஸ்பெக்டர், சப்- இன்ஸ்பெக்டர் என யாருமே பணியில் இல்லை. வருகைப்பதிவேடு, பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள், ரோல் கால், பணியில் உள்ள காவலர்கள் விவரம், ஆயுத பராமரிப்பு, நிலுவையில் உள்ள வழக்குகளின் தற்போதைய நிலவரம் என அனைத்தையும் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு நடத்த வந்த தகவல் இன்ஸ்பெக்டர் சாந்தி உள்பட மற்ற காவலர்களுக்கு சென்றதும், அடுத்த அரை மணி நேரத்தில் அனைவரும் போலீஸ் நிலையத்தில் ஆஜராகினர். அவர்களிடம், பணியில் மெத்தனமாக யாரும் இருக்கக்கூடாது. 24 மணி நேரமும் காவலர்கள் பணியில் ஈடுபட வேண்டும். புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கண்ணியத்துடனும், கடமை உணர்வுடனும் செயல்பட வேண்டும். பொதுமக்களிடம் இருந்து வரும் ஏராளமான புகார் மனுக்கள் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையம் தொடர்புடையதாகவே இருக்கிறது.

இனி வரும் காலங்களில் இந்த நிலை தொடர்ந்தால் அனைவரும் ஆயுதப்படைக்கு செல்ல வேண்டிய நிலை வரும் என எச்சரித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு 12 கி.மீ. தூரம் சைக்கிளில் சென்று யாருக்குமே தெரியாமல் திடீர் ஆய்வு நடத்திய சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story