பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை


பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை
x

பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை சப்ளை செய்த மருந்துக்கடை உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை

பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை சப்ளை செய்த மருந்துக்கடை உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போதை மாத்திரை சப்ளை

மதுரையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சிலர் போதை மாத்திரைகள் சப்ளை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எனவே அதில் தொடர்புடையவர்களை கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன் பேரில் தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில், திடீர் நகர் உதவி கமிஷனர் ரவீந்திர பிரகாஷ் ஆலோசனையின் பேரில், எஸ்.எஸ்.காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் போதை மாத்திரை விற்பவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது மேலக்கால் மெயின் ரோட்டில் உள்ள பள்ளி அருகே 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை சப்ளை செய்வது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் அந்த பகுதிக்கு சென்று ரகசியமாக கண்காணித்தனர். அப்போது மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்ற 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

3 பேர் கைது

அவர்களிடம் விசாரித்த போது, துவரிமான் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்த ரகு (வயது 28), துவரிமான் கணேசபுரம் முத்து (28), எஸ்.எஸ். காலனி அருண் சக்கரவர்த்தி (25) என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 28 போதை மாத்திரைகள், 2 செல்போன்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

ரஷியாவில் மருத்துவம் படித்தவர்

கைது செய்யப்பட்டவர்களில் அருண் சக்கரவர்த்தி என்பவர் ரஷியாவில் மருத்துவம் படித்து பாதியிலேயே விட்டு விட்டு மதுரைக்கு வந்துள்ளார். பின்னர் இங்கு மருந்து கடை நடத்தி வருகிறார். அவரிடம் தான் ரகு, முத்து ஆகிய 2 பேரும் மனநோயாளிகளுக்கு வழங்கப்படும் மயக்க மாத்திரைகள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பின்னர் கொடுக்கப்படும் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி மாணவர்களுக்கு கொடுத்துள்ளனர். அதை குறிப்பிட்ட அளவிற்கு மேல் பயன்படுத்தும்போது போதை ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் மற்ற போதை பொருட்களைவிட இந்த மாத்திரைகள் விலை குறைவாக இருப்பதால் அதனை மாணவர்கள் வாங்கி பயன்படுத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. ஆனால் அந்த மாத்திரைகளை டாக்டரின் பரிந்துரை இல்லாமல் அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்தாக முடியும் என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story