முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை
சென்னை ஐகோர்ட்டு தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.
புதுடெல்லி,
2001 முதல் 2006-ம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து வளர்மதி உள்ளிட்டோரை விடுவித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2012-ம் ஆண்டு உத்தரவிட்டது.
இதனை மறு ஆய்வு செய்யும் வகையில், தாமாக முன் வந்து வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் தனது விடுதலைக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் வளர்மதி மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை பரிசீலித்த நீதிபதி ரிஷிகேஷ் ராய், நீதிபதி பிரசாந்த் குமார் மிஷ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, சென்னை ஐகோர்ட்டு தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.