சூர மகாகாளியம்மன் கோவில் தூக்கு தேர் திருவிழா
சூரப்பள்ளம் சூர மகாகாளியம்மன் கோவில் தூக்கு தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் தேரை தோளில் தூக்கி சென்றனர்.
கரம்பயம்:
சூரப்பள்ளம் சூர மகாகாளியம்மன் கோவில் தூக்கு தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் தேரை தோளில் தூக்கி சென்றனர்.
சித்திரை திருவிழா
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சூரப்பள்ளம் கிராமத்தில் சூர மகா காளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 25-ந் தேதி அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து கரைகாரர்களின் மண்டகப்படிகளும், மாவிளக்கு, காவடி, பால்குடம் எடுத்தல் ஆகிய நிகழ்சிகளும், வெண்ணைத்தாழி வீதி உலாவும் நடந்தது.
தூக்கு தேர் திருவிழா
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தூக்கு தேர் திருவிழா நேற்று நடந்தது. சுமார் 6 டன் எடை கொண்ட இந்த தேரை தூக்கி செல்ல சூரப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த கீழத்தெரு, மேலத்தெரு, நடுத்தெரு, கட்ட வேளாண் தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த இளைஞர்களும், பெரியவர்களும் ஒரு வார காலம் விரதம் இருந்து வந்தனர்.
நான்கு கரைகாரர்களும் நான்கு புறங்களிலும் பகுதிக்கு சுமார் 50 பேர் என்று கணக்கிட்டு 200-க்கும் மேற்பட்டவர்கள் தேரை கோவில் வாசலில் இருந்து தோள்களில் தூக்கி சென்றனர்.
தேர் கோவிலையும், எதிரே உள்ள தீர்த்த குளத்தையும் சுற்றி வந்து மீண்டும் கோவிலில இறக்கி வைத்தனர்.
முத்து பல்லக்கில் எழுந்தருளும் அம்மன்
தேரில் அம்மன் வரும்போது தேருக்கு முன்னே சூலப்பிடாரி என்ற காவல் தெய்வத்தை பக்தர்கள் பலக்கில் தூக்கி சென்றனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
இன்று(வெள்ளிக்கிழமை) இரவு முத்து பல்லக்கில் அம்மன் கோட்டைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.