முருகன் கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முருகன் கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.
ஓசூர்:
ஓசூரில், ரெயில் நிலைய சாலையில் உள்ள வேல்முருகன் கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா, கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, தினமும் சிறப்பு பூஜைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. மேலும், ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் முருகர், பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று மாலை சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சாமி, அம்பாளிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், சூரசம்ஹாரம் நடந்தது. இதையடுத்து சாந்தி அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில், ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஏ.மனோகரன், ஓசூர் மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன், கோவில் நிர்வாகி ராமச்சந்திரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (திங்கட்கிழமை) மாலை, முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.
இதேபோன்று கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.