வேலூர் கோட்டை மைதானத்தில் சூரசம்ஹாரம்
வேலூர் கோட்டை மைதானத்தில் ஜலகண்டேஸ்வர் கோவில் சார்பில் சூரசம்ஹாரம் நடந்தது. இதனை திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு ரசித்தனர்.
வேலூர் கோட்டை மைதானத்தில் ஜலகண்டேஸ்வர் கோவில் சார்பில் சூரசம்ஹாரம் நடந்தது. இதனை திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு ரசித்தனர்.
சூரசம்ஹாரம்
முருகன் கோவில்களில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கந்தசஷ்டி சூரசம்ஹாரமும் ஒன்றாகும். இந்தாண்டிற்கான கந்தசஷ்டி சூரசம்ஹாரம் நடந்தது. இதையொட்டி வேலூர் கோட்டை அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவிலில் காலை 7.30 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. பின்னர் 9 மணிக்கு சண்முகர் சிறப்பு அபிஷேகம், சத்ரு சம்ஹார திரிசதி, 11.30 மணிக்கு சண்முக அர்ச்சனை, தீபாராதனை நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் சூரசம்ஹாரம் நடந்தது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் கோவில் வளாகத்தில் எளிய முறையில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இந்தாண்டு கோட்டை மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகன் அம்பு எய்து சூரபத்மனை சம்ஹாரம் செய்வதை பக்தி பரவசத்துடன் கண்டு ரசித்தனர். இதில், ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா, கலவை சச்சிதானந்த சுவாமிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள், ஜலகண்டேஸ்வரர் கோவில் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபன நிர்வாகிகள் செய்திருந்தனர். இன்று (திங்கட்கிழமை) வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
வள்ளி-முருகன் திருமணம்
இதேபோன்று வேலூர் தோட்டப்பாளையம் மந்தைவெளி திடலில் இந்து முன்னணி, தோட்டப்பாளையம் பேட்டை வாசிகள் சார்பில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. முன்னதாக தாரகேஸ்வரர் கோவிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கந்தசஷ்டி விழாவையொட்டி வேலூர்-ஆற்காடு சாலை சைதாப்பேட்டையில் உள்ள பழனி ஆண்டவர் கோவிலில் காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் குடும்பம், குடும்பமாக சென்று சாமி தரிசனம் செய்து, கோவிலை சுற்றி வந்தனர். மாலை 6 மணியளவில் சூரசம்ஹாரமும், அதைத்தொடர்ந்து தெய்வானை முருகன் திருமணம் நடைபெற்றது. இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணியளவில் வள்ளி முருகன் திருமணமும், பின்னர் வள்ளி தேவசேனா சமேத பழனி ஆண்டவர் திருவீதி உலா நடைபெறுகிறது.
கே.வி.குப்பம்
கே.வி.குப்பத்தை அடுத்த மயிலாடுமலை சக்திவேல்முருகன் கோவிலில் 9-ம் ஆண்டு கந்த சஷ்டி விழா நடைபெற்றது. விழாவையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனக் காப்பு அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. வள்ளி, தெய்வயானை சமேத முருகப்பெருமான் வீதிஉலா நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். காமாட்சி அம்மன் பேட்டையில் செங்குந்தர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா நடைபெற்றது. விழாவையொட்டி மூலவருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. விழாவையொட்டி சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதுபோல, பல்வேறு முருகன் கோவில்களில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நடைபெற்றது.