பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் நகை அபேஸ்:சாம்பிராணி புகையை பரவ விட்ட மர்மநபர் கண்காணிப்பு கேமராவில் பதிவு


பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் நகை அபேஸ்:சாம்பிராணி புகையை பரவ விட்ட மர்மநபர் கண்காணிப்பு கேமராவில் பதிவு
x

பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் நகை அபேஸ் செய்ய சாம்பிராணி புகையை பரவ விட்ட மர்மநபர் கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய காட்சியின் மூலம் அவர் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்

அன்னதானப்பட்டி:

சேலம் லைன்மேடு பென்சன் லைன் 2-வது தெரு பகுதியை சேர்ந்த அக்பர்கான் மனைவி ஜான் பேகம் (வயது 65). அக்பர்கான் பாத்திரக்கடை ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அக்பர்கான் வேலைக்கு சென்ற பிறகு ஜான் பேகம் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அங்கு மர்மநபர் ஒருவர் வந்தார்.

அந்த நபர், ஜான் பேகத்திடம், உங்கள் வீட்டில் பிரச்சினைகள் சூழ்ந்து இருப்பதாகவும், அதனை விரட்ட பரிகார பூஜை செய்தால் வீட்டில் சந்தோஷம் இருக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் பரிகார பூஜை செய்யாவிட்டால் பிரச்சினைகள் அதிகமாகும் என்று ஜான் பேகத்துக்கு அந்த நபர் பயத்தை ஏற்படுத்தும் வகையில் கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜான்பேகம் பரிகார பூஜை செய்ய சம்மதம் தெரிவித்ததுடன் தன்னிடம் இருந்த ¾ பவுன் கம்மல், ஒரு மோதிரம் ஆகியவற்றை அந்த நபரிடம் இருந்த மண்சட்டியில் வைத்தார். உடனே அந்த நபர் பரிகாரம் செய்வதாக கூறி சாம்பிராணி புகையை அதிக அளவு பரவ விட்டார். வீடு முழுவதும் சாம்பிராணி, புகை மண்டலமாக காட்சி அளித்தது.

உடனே அந்த நபர் நகையை அபேஸ் செய்து கொண்டு அங்கிருந்து நைசாக தப்பி சென்றார். சிறிது நேரம் கழித்து அந்த நபரை காணாத ஜான்பேகம் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசில் ஜான்பேகம் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

ஒரு கேமராவில் ஒருவர் நடந்து செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. அதாவது அந்த நபர் மந்திரவாதியாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story