என்.எஸ்.சி.போஸ் சாலையின் கண்காணிப்பு கேமரா பதிவை தாக்கல் செய்ய வேண்டும் - சென்னை மாநகராட்சிக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


என்.எஸ்.சி.போஸ் சாலையின் கண்காணிப்பு கேமரா பதிவை தாக்கல் செய்ய வேண்டும் - சென்னை மாநகராட்சிக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x

என்.எஸ்.சி.போஸ் சாலையில் ஆக்கிரமிப்புகள் இல்லை என்பதற்கு ஆதாரமாக அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை

சென்னை ஐகோர்ட்டுக்கு முன்புள்ள என்.எஸ்.சி.போஸ் சாலையில் உள்ள நடைபாதையை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதை எதிர்த்து மறைந்த டிராபிக் ராமசாமி பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டது. அதன்பின்னரும், வியாபாரிகளை அப்புறப்படுத்தாததால், மாநகராட்சி ஆணையருக்கு எதிராக டிராபிக் ராமசாமி கடந்த 2016-ம் ஆண்டு கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போது வரை நடைபாதையை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர். அவர்களை அப்புறப்படுத்தவில்லை என்ற புகைப்பட ஆதாரத்தை மனுதாரர் தரப்பு வக்கீல் தாக்கல் செய்தார். ஆனால், இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாக மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், "வருகிற திங்கட்கிழமை முதல் அடுத்த ஞாயிற்றுக்கிழமைக்குள் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்த வேண்டும். என்.எஸ்.சி.போஸ் சாலையில் ஆக்கிரமிப்புகள் இல்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இதற்கு ஆதாரமாக அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான பதிவுகளையும், அதுதொடர்பான அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டனர். பின்னர் வழக்கு விசாரணையை ஜூலை 4-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Next Story