குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்


குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
x
தினத்தந்தி 19 Sept 2022 12:15 AM IST (Updated: 19 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரியில் குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

குற்ற சம்பவங்கள்

குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை விரைந்து பிடிக்கவும், போலீசாரின் கண்காணிப்பு பணிக்கும், குற்ற செயல்களை தடுக்கவும் கண்காணிப்பு கேமராக்கள் பெரிதும் உதவியாக உள்ளது. கோத்தகிரி நகரின் முக்கிய பகுதிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல்துறை மூலம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, போலீஸ் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் திருட்டு மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்க வேண்டி கடைகள், வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இதையடுத்து கோத்தகிரி பகுதியில் உள்ள கடைகளில் வியாபாரிகள் கேமராக்களை பொருத்தினர். இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோத்தகிரி காந்தி மைதானத்தில் நள்ளிரவில் வாலிபர் ஒருவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.

கண்காணிப்பு கேமராக்கள்

இதில் குற்றவாளியை கண்டுபிடிக்க போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை தேடி அலைந்தனர். மைதானம் அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தவிர, அப்பகுதியில் வேறு எங்கும் கேமராக்கள் இல்லாததால் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து குஞ்சப்பனை சோதனை சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து கோத்தகிரி நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள கடைகளுக்கு வெளியே சாலைகள் தெரியுமாறு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி காவல்துறையினருக்கு உதவுமாறு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வியாபாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து வியாபாரிகள் தங்களது கடைகளுக்கு வெளியே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, பெரும்பாலான இடங்களில் சாலைகள் தெரியும் வகையில் கேமராக்கள் பொருத்துவதால் போலீசாரின் கண்காணிப்பு பணிக்கு உதவியாக இருப்பதுடன், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை விரைவில் கைது செய்ய முடியும். இதனால் குற்ற சம்பவங்கள் குறைய வாய்ப்பு உள்ளது என்றனர்.



Next Story